நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவத்தில் மரணமடைந்த பெண்; இழப்பீடு விவகாரம், நீதிமன்றம் முடிவு செய்யும்: அமைச்சர் ஹன்னா

புத்ராஜெயா: 

கோலாலம்பூரின் பரபரப்பான ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திடீரென உருவான பயங்கர குழியில் விழுந்து உயிரிழந்த இந்தியப் பெண் சுற்றுலாப் பயணி தொடர்பான இழப்பீட்டு விவகாரம், நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கே விடப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் (கூட்டாட்சிப் பகுதிகள்) ஹன்னா யோஹ் தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதிமன்றம் வழியாக இழப்பீட்டுக் கோரிக்கையை முன்வைக்கலாம் என்றும், கோலாலம்பூர் இதுபோன்ற சம்பவத்தை இதற்கு முன் எதிர்கொண்டதில்லை என்றும் அவர் கூறினார்.

“முதலாவதாக, இந்த மனதை உருக்கும் சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஒரு அளவிற்கு நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று ஹன்னா யோஹ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 “இழப்பீட்டு விவகாரம் நீதிமன்ற நடைமுறைகள் மூலமாகவே தீர்மானிக்கப்பட வேண்டும். குடும்பத்தினரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றமே முடிவு செய்யட்டும். கோலாலம்பூரில் இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நிகழாததால், இது மிகவும் விசேடமான வழக்காகும்,” என்றார் அவர்.

இந்த விவகாரம் குறித்து கோலாலம்பூர் மேயர் டத்தோ ஃபட்லூன் மக் உஜூடுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் முதலில் இந்தியா திரும்பிய பின்னர் தன்னைச் சந்திக்க உள்ளதாகவும் ஹன்னா தெரிவித்தார்.

48 வயதான இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஜி. விஜயா லக்ஷ்மியின் குடும்பத்தினர், தகுந்த இழப்பீட்டை கோரி வருவதாகவும், நேற்று இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதத்திற்குள் ஹன்னா யோஹ், கோலாலம்பூர் மேயரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

கடந்த ஆகஸ்ட் 23, 2024 அன்று, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடந்து சென்றுக் கொண்டிருந்த விஜயா லக்ஷ்மி, திடீரென உருவான ஆழமான குழியில் விழுந்து காணாமல் போனார். அந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

பல்வேறு அரசாங்க அமைப்புகள் இணைந்து மிகப்பெரிய தேடுதல், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், விஜயா லக்ஷ்மியின் உடல் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த துயர சம்பவம், குடும்பத்தினரை மட்டுமின்றி பலரின் மனதையும் கனக்க வைத்தது.

இதன் பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி 27 அன்று, இழப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவும் வகையில், விஜயா லக்ஷ்மிக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் அரசாங்கத்திடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு முன்பு வரை, விஜயா “காணாமல் போன நபர்” என்ற வகைப்பாட்டிலேயே இருந்ததால், அதிகாரப்பூர்வமாக இறப்புச் சான்றிதழ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இப்போது அந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது, நீண்டநாள் வேதனையில் இருந்த குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset