நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஜிட்டல் இருள் உலகின் கொடூர முகம்: சிறுவர்களுக்கு எதிரான 15,000 பாலியல் குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர்: 

கோலாலம்பூரில் நடைபெற்ற 2026–2030 தேசிய சமூகக் கொள்கை செயல்திட்ட அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) வெளியிட்ட இந்த அதிர்ச்சி தரவுகள், டிஜிட்டல் உலகில் மறைந்து கிடக்கும் சமூக அச்சுறுத்தல்களின் கொடூரத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக தெரிவித்தார்.

தேசிய சமூக கவுன்சிலின் தலைவராகப் பேசுகையில், “இன்றைய இணைய உலகம் வெறும் தகவல் பரிமாற்ற தளம் அல்ல; அது மோசடி, அவதூறு, பாலியல் சுரண்டல், குழந்தைகளின் மனநிலையை விஷமாக்கும் அபாயகரமான உள்ளடக்கங்கள் ஊடுருவும் இருண்ட வாசலாக மாறியுள்ளது” என்று எச்சரிக்கை விடுத்தார்.

“இப்போது மோசடிகளால் கணநேரத்தில் பணம் பறிக்கப்படுகிறது… பொய்யான குற்றச்சாட்டுகளால் மனிதர்களின் கண்ணியம் நொறுக்கப்படுகிறது… அதைவிட வேதனையானது, பாதுகாப்பாக இருக்க வேண்டிய குழந்தைகள் ஆபத்தான இணைய உள்ளடக்கங்களின் பலியாகி வருகின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 மேலும், சமூக அச்சுறுத்தல்கள் இனி வெளியில் மட்டும் இல்லை; அவை குடும்பங்களின் அமைதிக்குள் கூட மௌனமாக நுழைந்து, குழந்தைகளின் எதிர்காலத்தை சிதைக்கும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளன என்றார் அவர்.

2026–2030 தேசிய சமூகக் கொள்கை செயல்திட்டம் குறித்து பேசுகையில், “இது வெறும் ஆவணத் திட்டமாக இருக்கக் கூடாது; மக்களின் உண்மை வாழ்க்கையைத் தொடும் செயல்திட்டமாக மாற வேண்டும்” என்று ஜாஹித் வலியுறுத்தினார். உதவிகள் உண்மையில் தேவைப்படுபவர்களை சென்றடைய வேண்டும்; பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது; தகவல் பரிமாற்றத்தில் இடைவெளி ஏற்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

“கொள்கைகளில் இருந்து செயல்பாட்டிற்கும், உதவிகளில் இருந்து மக்களின் சுயநிறைவை உருவாக்கும் மாற்றத்திற்கும் நாம் நகர வேண்டும். மக்கள் வாழ்க்கையை மாற்ற முடியாத சமூகக் கொள்கைகளுக்கு அர்த்தமே இல்லை,” என்று அவர் கூறினார்.

சமூகச் சவால்கள் நாளுக்கு நாள் சிக்கலான பரிமாணத்தை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார அழுத்தம் மனஅழுத்தத்தை உருவாக்குகிறது; மனஅழுத்தம் குடும்பங்களை உடைக்கிறது; குடும்பச் சீர்கேடு குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்துக்குள் தள்ளுகிறது என்ற கடுமையான உண்மையையும் அவர் வெளிப்படுத்தினார்.

2023 தேசிய சுகாதாரம், நோயுற்றமை ஆய்வின் தகவல்களை மேற்கோள் காட்டிய அவர், “மலேசியாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் பெரியவர்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைவிட அதிர்ச்சியளிப்பது, ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை மனநலப் பிரச்சினைகளுடன் போராடி வருகிறது,” என்றார் அவர்.

“இவை வெறும் எண்கள் அல்ல… ஒவ்வொரு எண்ணுக்கும் பின்னால் அழுகையும், பயமும், உதவி கேட்க முடியாமல் தவிக்கும் ஒரு உயிரும் இருக்கிறது. நமது வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள், சமூகங்கள் அனைத்திலும் மௌனமாக உதவி கேட்கும் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset