நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மழலையர் பள்ளியில் நேர்ந்த அவலம்: குழந்தையைக் கிள்ளிய ஆசிரியைக்கு நீதிமன்றம் அபராதம்

பத்து பஹாட்:

யோங் பெங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 25 வயது ஆசிரியை ஒருவர், நான்கு வயது சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். 

தற்காப்பு வழக்கறிஞர் மூலமாகத் தனது தரப்பு வாதத்தை முன்வைத்த அவர், சம்பவத்தன்று தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். 

இதனைத் தொடர்ந்து, மஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் அந்த ஆசிரியைக்கு RM1,200 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 10 மணியளவில், தாமான் சென்டாங் ஜெயாவில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்று மாலை தனது மகளை அழைத்துச் செல்ல வந்த தாயார், குழந்தையின் வலது கையில் இரத்தக் கசிவுடன் கூடிய காயம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

ஆசிரியை குழந்தையைக் கிள்ளியதே இதற்குக் காரணம் எனத் தெரிந்ததும், அவர் உடனடியாகப் பாரிட் சுலோங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மருத்துவப் பரிசோதனையில் சிறுமியின் கையில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். 

இரண்டு முறை பலமாகக் கிள்ளியதால் ஏற்பட்ட காயத்திற்காக, அந்த ஆசிரியை மீது தண்டனைச் சட்டத்தின் 323-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த ஆசிரியை அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தினார். 

ஒரு மழலையர் பள்ளி ஆசிரியையே குழந்தையிடம் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி பெற்றோர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset