நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்மைக்கும் பணிக்கும் இடையிலான போராட்டம்: பெண் உழைப்பாளர்களைத் தக்கவைக்க எழும் புதிய கோரிக்கைகள்

கோலாலம்பூர்:

மலேசியாவில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் தாய்மார்களுக்கு, வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 30 நாட்கள் வரையிலான நிதியுதவி வழங்கும் அரசின் முடிவை 'சமூக, பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்' (SERI) வரவேற்றுள்ளது. 

வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை 63 விழுக்காடாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு சாதகமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெண்கள் பணியிடத்தில் நிலைத்திருக்க வெறும் நிதியுதவி மட்டும் போதாது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்திய ஆய்வின்படி, 70 விழுக்காட்டிற்கும் அதிகமான தாய்மார்கள் பணியிடத்தில் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் அவசியம் எனக் கருதுகின்றனர். 

ஆனால், 4.4 விழுக்காடு பெண்களுக்கு மட்டுமே அத்தகைய வசதிகள் கிடைக்கின்றன. இதனால் சுமார் 36 விழுக்காடு பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களையே குழந்தைப் பராமரிப்பிற்கு நம்பியிருக்க வேண்டியுள்ளது. முறையான பராமரிப்பு வசதிகள் இல்லாததே பெண்கள் பணியைத் தொடர்வதற்குப் பெரும் தடையாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், 74 விழுக்காடு பெண்கள் நெகிழ்வுத்தன்மை கொண்ட வேலை நேரத்தையும் (Flexible working hours), 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையையும் விரும்புகின்றனர். 

நிதியுதவியுடன் சேர்த்து, பணியிடங்களில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலமே பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும் என்று சமூக, பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ரஷாத் அலி தெரிவித்துள்ளார்.

தாய்மார்களுக்கு மட்டுமின்றி, தந்தையர்களுக்கும் போதிய விடுப்பு வழங்கி குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகளைச் சமமாகப் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

குழந்தைப் பராமரிப்பு மானியங்கள், நெகிழ்வான வேலை நேரம், முதலாளிகளின் பொறுப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆதரவுச் சூழலை உருவாக்குவதே பெண் தொழிலாளர்களைத் தக்கவைக்க உதவும் நிதர்சனமான தீர்வாகும் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset