செய்திகள் மலேசியா
அம்னோவின் மதிப்புமிக்கத் தலைவர் நஜிப்: ஒன் ஹாஃபிஸ் காஜி
கோலாலம்பூர்:
ஜொகூர் அம்னோ தலைவர் ஒன் ஹாஃபிஸ் காஜி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது மாநிலக் கிளை தொடர்ந்து ஆதரவு கொண்டுள்ளதாகவும், அவர் இன்னும் கட்சி உறுப்பினர்களால் மதிக்கப்படும் தலைவராகத் திகழ்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோவின் 80ஆம் ஆண்டு விழாவில் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய அவர், கட்சியின் சவாலான காலகட்டங்களில் நஜிப் ஆற்றிய பங்களிப்புகளை ஜொகூர் மாநிலம் மறக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
“ஜொகூரில் நாங்கள் அவரை இன்னும் நினைவுகூர்கிறோம். இக்கட்டான சூழ்நிலையை அவர் எதிர்கொள்ளும் நிலையில், அவருக்கு மனவலிமையும் அமைதியும் கிடைக்கட்டும்,” என்றார் அவர்.
மேலும், நஜிப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சித் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஜொகூர் அம்னோ முழுமையான ஆதரவை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்திற்கு சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நஜிப் தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் நாட்டின் 16ஆவது மாமன்னர் தண்டனை காலத்தையும் அபராதத் தொகையையும் குறைத்தார்.
இதேவேளை, இளம் தலைமுறையினரிடையே அரசியலின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதன் அவசியத்தை ஒன் ஹாஃபிஸ் வலியுறுத்தினார். பல இளைஞர்கள் அரசியலை மோதல், அவதூறு, பிளவுகளுடன் இணைத்து பார்க்கும் நிலை காணப்படுவதாக அவர் கூறினார்.
“அரசியல், புத்திசாலித்தனமும் பொறுப்பும் கொண்ட வழிநடத்தலின் கீழ் செயல்பட்டால், அது சமூக ஒற்றுமையையும் தேசிய முன்னேற்றத்தையும் உறுதி செய்யக்கூடிய சக்தியாக மாறும்,” என்றார் அவர்.
அம்னோவின் வரலாற்றைப் பற்றிப் பேசிய அவர், ஃப்பெல்டா, மாரா, பெட்ரோனாஸ் போன்ற நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், நாட்டின் வளர்ச்சியில் கட்சி முக்கிய பங்கு வகித்ததாக சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி கட்சிக்கு ஒரு விழிப்புணர்வாக அமைந்ததாகவும், கடந்த கால குறைபாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 3:33 pm
சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்குப் பெர்கேசோ பாதுகாப்பு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
May 2, 2026, 3:11 pm
கேஎல்ஐஏ-வில் பிச்சை எடுத்த வெளிநாட்டவர்கள்: இருவர் கைது
May 2, 2026, 11:42 am
