நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்குப் பெர்கேசோ பாதுகாப்பு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

ஜொகூர் பாரு:

வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசிய குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பு அமைப்பு (Socso) பாதுகாப்பை விரிவுபடுத்த அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டம், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிதி அபாயங்களை குறைக்கும் என சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 குறிப்பாக தினமும் எல்லை தாண்டி பயணம் செய்பவர்களுக்கு விபத்துகள் நேரிடும் சூழலில் இந்த நடவடிக்கை முக்கியமான சமூக பாதுகாப்பை வழங்கும் என ஆறு ஆண்டுகளாக SingPost நிறுவனத்தில் பணிபுரியும் 35 வயதான அக்மல் ஹகிம் சைனுத்தீன் தெரிவித்தார். 

பல மலேசிய தொழிலாளர்கள் தங்களது நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பையே முழுமையாக நம்பியிருப்பதுடன், அவற்றின் காப்புறுதி வரம்புகள், நன்மைகள் மாறுபடுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தனிப்பட்ட காப்பீடு அல்லது தகாஃபுல் திட்டங்கள் இல்லாதது, விபத்து, ஊனம் அல்லது உயிரிழப்பு போன்ற சூழல்களில் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெரும் நிதிசுமையை ஏற்படுத்துகிறது.

“Socso பாதுகாப்பு வழங்கப்பட்டால், குறைந்தபட்சம் நம் சொந்த நாட்டின் ஆதரவாக ஒரு பாதுகாப்பு வலயம் கிடைக்கும். தினமும் பயணம் செய்யும் நமக்கு, குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்லும் தொழிலாளர்களுக்கு இது மிக அவசியமானது,” என்றார் அவர்.

பெர்மாஸ் ஜெயாவிலிருந்து துவாஸ் வரை கடந்த ஆறு ஆண்டுகளாக தினமும் பயணம் செய்து வரும் 32 வயதான தொழில்நுட்ப நிபுணர் ராஜா ஹாசிக் ராஜா ஜாஃபார், இதே கருத்தை வலியுறுத்தினார்.

“சில நிறுவனங்கள் வேலை நேரத்திற்குள் மட்டுமே பாதுகாப்பு வழங்குகின்றன; சில நிறுவனங்கள் எந்தவொரு பாதுகாப்பையும் வழங்குவதில்லை. வேலை முடிந்து வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டால், அதன் முழுச் செலவையும் தொழிலாளியே ஏற்க வேண்டிய நிலை உருவாகிறது. இதுபோன்ற சூழல்களில் Socso போன்ற பாதுகாப்பு அவசியம்,” என்றார் அவர்.

முன்னதாக, தேசிய தொழிலாளர் தினம் 2026 கொண்டாட்டத்தின் போது பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்த முன்மொழிவை அறிவித்திருந்தார். அதன்படி, சுயதொழில் சமூக பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்குச் செல்லும் எல்லை தாண்டிய தொழிலாளர்களுடன் தொடங்கப்பட உள்ளது.

இந்த முயற்சி, சிங்கப்பூரில் பணிபுரியும் 400,000க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset