நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தோசாவில் ஒற்றுமை சித்திரை பண்பாட்டு விழா; மே 10ஆம் தேதி கோலாகலமாக நடைபெறும்: குணராஜ்

கிள்ளான்:

செந்தோசாவில் ஒற்றுமை சித்திரை பண்பாட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

செந்தோசா ஒற்றுமை சித்திரை பண்பாட்டு விழா வரும் மே 10ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செந்தோசா தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

பல்வேறு அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள், ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து இவ்விழா நடைபெறுகிறது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்களிடையே ஒற்றுமையும் இந்திய பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் இவ்விழா நடத்தப்படுகிறது.

பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சிகள், இந்திய பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கண்காட்சிகள், சமூக குடும்ப நடவடிக்கைகள், பாரம்பரிய உணவுக் கடைகள், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி உட்பட பல நிகழ்வுகளை இவ்விழா உட்படுத்தி உள்ளது என்று அவர் கூறினார்.

பண்பாட்டின் மூலம் நாம் அனைவரையும் ஒரே சமூகமாக இணைக்க முடியும்.

இந்நிகழ்ச்சி தலைமுறைகள் கடந்து வந்த பாரம்பரியத்தை பாதுகாக்கவும் இளைஞர்களிடம் மதிப்புணர்வை உருவாக்கவும் உதவும்.

இந்நிகழ்ச்சி அரசு சாரா அமைப்புகள் இந்து வழிபாட்டு தலங்கள், பள்ளி நிர்வாகம், தன்னார்வலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியாக நடைபெறுகிறது.

மக்கள் நலனுக்காக அரசு துறைகளின் பங்கேற்பு, இரத்த தான முகாம், சுகாதார பரிசோதனை உள்ளிட்ட பல சேவைகளும் வழங்கப்படுகின்றன.

விழாவை மேலும் சிறப்பிக்க மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி உள்ளிட்ட பரிசுகளுடன் அதிர்ஷ்டக் குலுக்கலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செந்தோசாவை சேர்ந்த பலர் பல துறைகளில் சாதித்துள்ளனர். அவர்களை கௌரவிக்கும் நோக்கில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதில் பூப்பந்து வீராங்கனை தீனா முரளிதரனும் அடங்குவார்.

அதே வேளையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கலந்து கொள்ளவுள்ளார்.

ஆக அனைவரும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுடன் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பிக்க வேண்டும் என குணராஜ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset