நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வானில் பறந்த மனிதாபிமானம்: காட்டுப்பகுதியில் துடிக்கும் உயிர்களுக்கு யார் பதிலளிப்பது?

குவா மூசாங்:

நேற்று, போஸ் பிஹையிலிருந்து குவா மூசாங் மருத்துவமனைக்கு, மேலதிக சிகிச்சைக்காக, ஒரு பழங்குடிப் பெண்ணை அழைத்துச் செல்வதற்காக, மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் விமானப் பிரிவு ஒரு மருத்துவ மாற்று விமான நடவடிக்கையை மேற்கொண்டது.

 கம்போங் தென்றிக்கைச் சேர்ந்த, ஐந்து மாத கர்ப்பிணியான 24 வயதுடைய அந்தப் பெண், அளவுக்கதிகமான இரத்தப்போக்கைச் சந்தித்ததால் அவருக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டதாக பினாங்கின் பெர்டாமில் உள்ள வடக்கு பிராந்திய விமானத் தளத்தின் (PUWU) பொதுத் தொடர்பு அதிகாரி, துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் அப்துல் அஸ்ரி சஜாலி தெரிவித்தார்.

விமானம் PUWU-யிலிருந்து மாலை 3.20 மணிக்குப் புறப்பட்டு, போஸ் பிஹையை மாலை 4.09 மணிக்கு வந்தடைந்ததாகவும், நோயாளியும், அவருடன் ஒரு துணை நபரும், பின்னர் மாலை 4.17 மணிக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் AW 139 என்ற விமானத்தைப் பயன்படுத்தி, குவா மூசாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நோயாளி மாலை 4.29 மணிக்குப் பாதுகாப்பாக வந்தடைந்ததாகவும், பின்னர் குவா மூசாங் மருத்துவமனையின் ஆம்புலன்ஸுடன் காத்திருந்த சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அப்துல் அஸ்ரி கூறினார்.

ஐந்து விமானப் பணியாளர்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை, நல்ல வானிலையில் சுமூகமாக நடைபெற்றதாகவும், மொத்த விமான நேரம் இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும் என்றும் அப்துல் அஸ்ரி கூறினார்.

இச்சம்பவம் தொலைதூர பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதார அணுகல் இன்னும் குறைபாடாக இருப்பதை வெளிப்படுத்தும் கண்ணாடியாக இருக்கின்றது. 

காட்டுப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் இன்னும் எட்டாக்கனியாக இருப்பது அமைதியான சமூக அநீதியல்லவா?

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset