நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிளகாய் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் ஃபாமா

கோலாலம்பூர்:

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பண்ணை நிலை விலையில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியைத் தொடர்ந்து, கூட்டாட்சி வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் பினாங்கு மாநிலத்தில் சிவப்பு மிளகாய் விலையை நிலைப்படுத்தும் நோக்கில் சந்தைத் தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகள், விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதுடன், சந்தையில் சிவப்பு மிளகாய் விநியோகம் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

சந்தை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுமுகமாக, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மத் சாபு வழங்கிய உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று ஃபாமா தலைமை இயக்குநர் அப்துல் ரஷித் பஹ்ரி தெரிவித்தார். 

“உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் இடையே சமநிலையை பேணுவதற்காக, விலைச் சங்கிலி கண்காணிப்பை மேலும் திறம்பட மேற்கொள்ள ஃப்பாமா உறுதிபூண்டுள்ளது. இதனுடன், சந்தைப்படுத்தல் வலையமைப்புகளை வலுப்படுத்தி, பண்ணை மட்டத்திலிருந்து நேரடி கொள்முதலை விரிவுபடுத்துவதோடு, அக்ரோ உணவுப் பொருள் விநியோகச் சங்கிலியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் விற்பனை வாயில்களையும் உருவாக்கி வருகிறோம்,” என்றார்.

மேலும், பினாங்கு மாநில வேளாண்மைத் துறையுடன் இணைந்து, மே 5ஆம் தேதி டிகேபிஎம் ஆரா கூடாவில் மாநில எக்ஸ்கோ உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் அமர்வு நடைபெறவுள்ளதாகவும், அதில் பண்ணைத் துறை சவால்கள், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொருட்களின் விலை ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கவும், நிலையான விநியோகத்தையும் நுகர்வோருக்கான நியாயமான விலையையும் உறுதி செய்யவும், இத்தகைய தலையீட்டு முயற்சிகள் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வறண்ட காலநிலை காரணமாக உள்ளூர் அறுவடை அதிகரித்ததால் ஏற்பட்ட அதிகப்படியான விநியோகம், பண்ணை மட்டத்தில் விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது சிறு நிலத் தொழிலாளர்களின் வருமானத்தையும் பாதித்துள்ளது.

இதனை சமாளிக்கும் வகையில், பினாங்கு ஃப்பாமா, சிவப்பு மிளகாய் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட பயிர்களுக்கான பண்ணை நேரடி கொள்முதலை நாளொன்றுக்கு ஒரு டன்னிலிருந்து இரண்டு டன்னாக அதிகரித்துள்ளது.

மேலும், டிகேபிஎம் ஆரா கூடா, பெர்டா வெஜி பார்க், கெப்பாலா பாதாஸ் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை உள்ளடக்கிய சந்தைப்படுத்தல் ஒப்பந்தத் திட்டம் (ஆர்பிகேபி) செயல்படுத்தப்பட்டு, விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதுடன் இடைத்தரகர்களின் செல்வாக்கை குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதோடு, பசார் தானி, ஜுவாலான் அக்ரோ மதானி, அக்ரோபசார் கெடாய் ரக்யாட், மே 8ஆம் தேதி முதல் கொம்தாரில் தொடங்கவுள்ள வாராந்திர சிறப்பு விற்பனை நிகழ்ச்சிகள் மூலம் சந்தைப்படுத்தல் வலையமைப்பு விரிவுபடுத்தப்படுகிறது.

ஏப்ரல் 28ஆம் தேதி நிலவரப்படி, சந்தை விநியோகத்தையும் தேவையையும் சமநிலைப்படுத்தும் நோக்கில், ஃப்பாமா தலையீட்டு நடவடிக்கைகள் வழியாக சிவப்பு மிளகாய் உட்பட மொத்தம் 99.675 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset