நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் மின்னல் வேகத்தில் பரவும் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிகள்

கோலாலம்பூர்:

பகுதிநேர வேலை வாய்ப்பு மோசடிகள் (ஜாப் ஸ்கேம்) நாடு முழுவதும் அதிகரித்து வருவது கவலைக்கிடமான போக்காக இருப்பதாக அரச மலேசிய போலிஸ் படை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், மொத்தம் 1,537 வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், 31.8 மில்லியன் ரிங்கிட் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹம்மத் இசா, இந்த வழக்குகள் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பதிவாகியதாகத் தெரிவித்தார்.

இந்த மோசடிகளில், குற்றக் கும்பல்கள் சமூக ஊடகங்கள், மெசேஜிங் செயலிகள் வழியாக கவர்ச்சிகரமான பகுதிநேர வேலை வாய்ப்புகளை முன்வைத்து, பொதுமக்களை வலையில் சிக்கவைக்கின்றன.

“உண்மையான நிறுவனங்கள் வேலைக்கு முன்பாக எந்தவொரு முன்பணத்தையும் கோருவதில்லை. பதிவுக் கட்டணம், பயிற்சி கட்டணம், வைப்பு தொகை அல்லது உபகரணங்கள் வாங்குதல் போன்ற காரணங்களுக்காக பணம் கேட்கப்படுவது மோசடியின் முக்கிய அறிகுறியாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “சமூக ஊடகங்களில் ‘லைக், ‘பின்தொடரல்’ போன்ற எளிய பணிகளுக்குப் பதிலாக அதிக சம்பளம் அல்லது கமிஷன் வழங்கப்படும் எனக் கூறப்படும் சலுகைகள் மிகவும் சந்தேகத்திற்கிடமானவை; இத்தகைய சலுகைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஆராய்வது அவசியம் எனவும், அறியப்படாத நபர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள், அடையாள அட்டை நகல்கள், கடவுச்சொற்கள் போன்ற நுணுக்கமான தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தளங்கள் இல்லாமல், வாட்ஸ்அப், டெலிக்ராம் போன்ற செயலிகள் மூலம் மட்டுமே வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் மோசடியாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வேலை தேடுபவர்கள் 'LinkedIn', 'Indeed', 'JobStreet' போன்ற அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் அல்லது நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“ஆரம்பத்தில் குறைந்த அளவு சம்பளம் அல்லது கமிஷன் வழங்கி நம்பிக்கை பெறும் இந்தக் கும்பல்கள், பின்னர் அதிக தொகையை மோசடி செய்கின்றன. சந்தேகமான சூழ்நிலைகளில் உடனடியாக காவல் துறையை அணுகவும் அல்லது ‘Semak Mule’ சேவையின் மூலம் வங்கிக் கணக்குகள், தொலைபேசி எண்களைச் சரிபார்க்கவும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset