நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களுக்குத் துரோகம் இழைக்க மாட்டோம்: பிரதமர் அன்வார் உறுதி

கோலாலம்பூர்:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதலால் உலகளவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளை சமாளிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகளில், மக்களின் ஆணையை அரசு எப்போதும் மதிக்கும் என்றும் அதனை எந்த நிலையிலும் மீறாது என்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், உலக பொருளாதார நிலைமை மேலும் சீர்குலையும் வாய்ப்பு இருப்பதால், தேவையான கூடுதல் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

எண்ணெய் உற்பத்தி நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கிடையில், புரூணை உடன் ஒப்பிடுகையில், குறைந்த எரிபொருள் விலையைக் கொண்ட நாடுகளில் மலேசியாவும் இடம்பெறுகிறது என அவர் கூறினார்.

“அரசு தொடர்ந்து உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு, நிலைமைகளுக்கு ஏற்ப தேவையான தீர்மானங்களை எடுக்கும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையை முந்தைய மாதங்களுடன் ஒப்பிட முடியாது; உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் தளர்வடைந்து வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார நிபுணர்கள், தொழில் நிறுவனங்கள், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்த எரிபொருள் விலை உயர்வு அவசியம் என பரிந்துரைத்துள்ளதாகவும், அதேவேளை குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான தாக்கத்தை அரசு கவனத்தில் எடுத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

“நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் அரசு செயல்படுகிறது. குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன,” என்றார்.

மேலும், அரசின் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டியது அவசியம் என்றும், தேவையான சூழ்நிலையில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மக்களின் நம்பிக்கையை அரசு துரோகம் செய்யாது என்றும் அவர் உறுதியளித்தார்.

தேசிய தொழிலாளர் தின நிகழ்வில் உரையாற்றிய அவர், தலைவர்கள் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து அவர்களின் கருத்துகளை கேட்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

“அதிகாரத்தில் இருப்பதால் அனைத்தையும் நாங்கள் அறிவோம் என கருத முடியாது. பல விடயங்களை மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது,” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset