நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் பிந்தாங்கில் அதிரடி சோதனை: குடிவரவுத் துறை அதிகாரிகளை ஆயுதத்தால் மிரட்டிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி

கோலாலம்பூர்: 

புக்கிட் பிந்தாங்கில் உள்ள கேளிக்கை விடுதிகளில் இன்று அதிகாலை குடிவரவுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையின் போது, மேலைநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்து 'கெராம்பிட்' (Kerambit) எனும் வளைந்த கூர்மையான ஆயுதத்தைக் காட்டி மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், தான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்று கூறிக்கொண்டதோடு, சீருடையில் இருந்த அதிகாரிகளைப் போலி அதிகாரிகள் என விளித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சுமார் 12.20 மணியளவில் தொடங்கிய இந்த 'ஒப் கெகார்' (Op Gegar) நடவடிக்கையின் போது, அந்த நபர் மலேசியாவைப் பற்றியும் அதிகாரிகளைப் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார் . 

அதிகாரிகள் துப்பாக்கி ஏந்தியிருந்த போதிலும், மிகவும் நிதானத்துடனும் தொழில்முறைப் பண்புடனும் நிலைமையைக் கையாண்டனர். இறுதியில் காவல்துறையின் மோட்டார் சைக்கிள் ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு, அந்த நபர் தனது ஆயுதத்தை ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்கச் சம்மதித்தார்.

இந்தச் சோதனையில் மொத்தம் இரண்டு கேளிக்கை விடுதிகள் இலக்கு வைக்கப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்தோனேசியா, உகாண்டா, மியான்மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர், வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 39 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாத, விசா விதிகளை மீறிய 23 சட்டவிரோதக் குடியேறிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 வங்காளதேச ஆண்கள், 8 வியட்நாம் பெண்கள், 2 இந்தோனேசியப் பெண்கள், ஒரு உகாண்டா நாட்டுப் பெண் ஆகியோர் அடங்குவர். 

மேலும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உள்ளூர் முதலாளி ஒருவரும் பிடிபட்டுள்ளார். பிடிபட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காகக் கோலாலம்பூர் குடிவரவுத் துறை தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் மீது குடிவரவுச் சட்டம், விதிமுறைகளின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset