நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் எல்லை தொடர்பான ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் சபாவின் நலன்கள் எப்போதும் முன்னுரிமையாகும்: சபா அரசாங்கம்

கோத்தா கினபாலு:

நாட்டின் எல்லை நிர்ணயம் தொடர்பான ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும், குறிப்பாக புலாவ் செபாத்திக் மலேசியா-இந்தோனேசிய எல்லைப் பிரச்சினையில், மாநிலத்தின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்பட்டு முன்னுரிமையாக இருப்பதாக சபா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

 சபாவின் உரிமைகளும் நலன்களும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மாநில அரசாங்கம் அனைத்து நிலைகளிலும் உள்ள தொழில்நுட்ப, இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என்று முதலமைச்சருக்கான உதவி அமைச்சர் டத்தோ ஜோனிஸ்டன் பாங்குவாய் தெரிவித்துள்ளார். 

சபா முதலமைச்சர் துறை, சபா மாநில சட்ட ஆலோசகர் துறை, சபா நிலம், ஆய்வுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

"மாநிலத்தின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்பட்டு முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சபா மாநில அரசாங்கம் ஒவ்வொரு நிலையிலும் உள்ள பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகிறது" என்று நேற்றிரவு இங்கு நடைபெற்ற சபா மாநில சட்டமன்ற அமர்வில், சபா மாநில அரசாங்கத்தின் கொள்கை உரையில் சபா ஆளுநர் துன் மூசா அமான் வழங்கிய உரையில், முதலமைச்சர் துறையுடன் தொடர்புடைய விவாதத்தை நிறைவு செய்யும் போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜோனிஸ்டன், கூட்டமைப்பு அரசியலமைப்பின் பிரிவு 2-ன் படி, சபா மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் மாநில எல்லைகளில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று விளக்கினார்.

புலால் செபாத்திக்கின் நில எல்லைப் பிரச்சினையை விரிவாகக் கூறிய அவர், இது மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில், பிப்ரவரி 18, 2025 அன்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) எண் 23 கையெழுத்திடப்பட்டதன் மூலம் இறுதி செய்யப்பட்டதாக விளக்கினார்.

அந்தத் தீவில் 100 ஹெக்டேர் நிலத்தை இந்தோனேசியாவிடம் ஒப்படைப்பதாகக் கூறப்படுவது, இறையாண்மையை ஒப்படைப்பதற்கான ஒரு வடிவம் அல்ல, மாறாக ஏற்கனவே உள்ள சர்வதேச ஒப்பந்தத்திற்கு இணங்குவதாகும் என்றார் அவர்.

1983 ஆம் ஆண்டில் மலேசியா, இந்தோனேசியாவின் கூட்டுத் தொழில்நுட்ப மதிப்பாய்வு, களத்தில் உள்ள எல்லை நிர்ணயத்திற்கும், நிர்ணயிக்கப்பட்ட அட்சரேகைக் கோட்டிற்கும் இடையில் ஒரு வேறுபாடு இருப்பதைக் கண்டறிந்ததாக ஜோனிஸ்டன் கூறினார்.

அதன்படி, 2019 ஆம் ஆண்டில், எல்லை நிர்ணயத்தின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மறு ஆய்வு, குறித்தல், மறு அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.

புலாவ் செபாத்திக் எல்லை நிர்ணயத்தை மறுசீரமைப்பதற்கான தீர்வு, சுங்கை சினாப்பாட், சுங்கை செச்சாய் பகுதிகளுடன் இணைந்து செய்யப்பட்டதாக அவர் கூறினார். இதில், மலேசியா 780 ஹெக்டேர் கூடுதல் பிரதேசத்தைப் பெற்றது.

"இந்த முழுச் செயல்முறையும், இரு நாடுகளின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில், சர்வதேச சட்டத்திற்கு இணங்கச் செயல்படுத்தப்பட்டது. மேலும், இது ஆதாயம், இழப்புக் கொள்கைகளை உள்ளடக்கவில்லை" என்றார் அவர்.

புலாவ் செபாத்திக் கிழக்குப் பகுதியில், கடலை நோக்கி 870 மீட்டர் நீளத்திற்கு அலை-ஓதப் பகுதிகள், சரவாக்-மேற்கு கலிமந்தன் பிரிவில் நான்கு Outstanding Boundary Problem (OBP) பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

"குறிப்பிடப்பட்ட பகுதிகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இன்னும் நடைபெற்று வருகின்றன" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset