நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் குறுஞ்செய்தி: கைதான 46 வயது ஆடவரின் நோக்கம் அம்பலமானது

ஷா ஆலம்:

அம்பாங், தாமான் செராயா பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட அதிருப்தியே, அங்குள்ள நிர்வாகக் குழுவினருக்குத் தொல்லை கொடுத்த நபரின் முதன்மைக் காரணம் எனப் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார், கைதான 46 வயது நபரின் இந்தச் செயல் தனிப்பட்ட ரீதியிலானதே தவிர, இதற்குப் பின்னணியில் வெளிப்புறத் தாக்கங்கள் தொடர்பில்லை என்று உறுதிப்படுத்தினார்.

குறிப்பிட்ட அந்த நபர், சுருவின் நிர்வாகக் குழுவினருக்குத் தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் (WhatsApp) வாயிலாக மத உணர்வுகளையும், பிற உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். 

இது தொடர்பாக நிர்வாகக் குழுவினர் அளித்த 10 புகார்களின் அடிப்படையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டான் இந்தா பகுதியில் வைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மடிக்கணினி, கைபேசி, சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு இனங்கள், மதங்களைக் கொண்ட மலேசியாவில் பொதுமக்கள் மிகுந்த பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று டத்தோ ஷசெலி அறிவுறுத்தினார். 

குறிப்பாக மதம், அரசர், இனம் (3R) தொடர்பான உணர்வுப்பூர்வமான விஷயங்களில் யாரும் தன்னிச்சையாகச் சட்டத்தைக் கையில் எடுக்கவோ அல்லது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பகிரவோ கூடாது என்று எச்சரித்தார். 

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு அரசு வழக்கறிஞரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset