நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதாபிமானம் எங்கே? ஆட்டிசம் கொண்டவர்களின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தும் இணையக் குற்றவாளிகள்

கோலாலம்பூர்:

மலேசியாவில் ஆட்டிசம் (Autism) பாதிப்புடைய நபர்கள் இணையவழி மோசடிகளுக்கும், சமூக ஊடக மிரட்டல்களுக்கும் (Buli) அதிக அளவில் இலக்காகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்துப் பேசிய 'ஈர்லி ஆட்டிசம் புராஜெக்ட்' (EAP) மலேசியாவின் இயக்குனர் டாக்டர் ஜோசபெட் ஐசாக்ஸ், ஆட்டிசம் பாதிப்புடையவர்கள் இயல்பிலேயே மற்றவர்களை எளிதில் நம்பும் குணம் கொண்டவர்கள் என்பதால், அவர்களைக் குறிவைத்து பண மோசடி, 'கேட்ஃபிஷிங்' (Catfishing) போன்ற மோசடிகள் அரங்கேற்றப்படுவதாகத் தெரிவித்தார். 

உடல் அளவில் வளர்ந்திருந்தாலும், மன அளவில் குழந்தையாக இருக்கும் அவர்களின் நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, பெற்றோரின் கடன் அட்டைகளை (Credit Card) பயன்படுத்தத் தூண்டுவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இணையதளத்தில் மட்டுமல்லாது, கல்வி நிலையங்களிலும் இத்தகைய நபர்கள் சக மாணவர்களால் ஏமாற்றப்படுகின்றனர். மற்றவர்களுக்கு உதவி செய்வதைத் நட்பு என்று அவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது ஒரு வகை பகடிவதையாகும் என டாக்டர் ஜோசெபெட் சுட்டிக்காட்டினார். 

இதனைத் தவிர்க்க, உண்மையான நட்புக்கும், போலி நட்புக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்களுக்குக் கற்றுத் தருவது அவசியம் என்றும், சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறையான விமர்சனங்களைக் கையாளுவதற்கு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் இணையப் பயன்பாட்டைக் கண்காணிப்பதோடு, 'பெற்றோர் செட்டிங்ஸ்' (Parental Settings) வசதிகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

'மனிதாபிமானம் என்னிடமிருந்தே தொடங்குகிறது' எனும் பிரச்சாரத்தின் மூலம் ஆட்டிசம் குறித்த புரிதலைச் சமூகத்தில் ஏற்படுத்த இ.ஏ.பி (EAP) அமைப்பு முயன்று வருகிறது. 20-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட 'ஆட்டிசத்திற்கான ஓட்டம் 2026' நிகழ்வில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இச்சமூகத்திற்கான தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset