நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கஞ்சா மிட்டாயால் மயங்கிய 3 வயது சிறுமி: 39 வயது நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

மலாக்கா: 

மூன்று வயது சிறுமிக்கு கஞ்சா கலந்த இனிப்புகளை வழங்கியதாகக் கருதப்படும் 39 வயது நபர் ஒருவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாகத் தேவையான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சந்தேக நபர் மீது குற்றஞ்சாட்டுவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக மலாக்கா மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, மலாக்கா மருத்துவமனையில் அரை மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியைப் பரிசோதித்தபோது, அவரது உடலில் கஞ்சாவில் உள்ள நச்சுத்தன்மை (THC) இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இணையதளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள இவர், வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த அந்த மிட்டாய்களைத் தனது உறவினர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாகவும், அங்கு பராமரிப்பில் இருந்த சிறுமி அவற்றை உட்கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிகிச்சைக்குப் பிறகு சிறுமி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பிடிபட்ட நபர் மீது இதற்கு முன் எவ்வித குற்றப்பின்னணியும் இல்லை என்பதும், அவரிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் முடிவுகள் எதிர்மறையாக வந்ததும் குறிப்பிடத்தக்கது.

சோதனையின் போது அந்த மிட்டாய்கள் கண்டெடுக்கப்படவில்லை என்றாலும், முறையான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் கருதி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (D11) இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset