நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வறட்சியின் பிடியில் வடக்கு மாநிலங்கள்: அபாயக் கட்டத்தை நோக்கி அணைகள்

அலோர் ஸ்டார்: 

தீபகற்ப மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் நீடித்து வரும் கடும் வறட்சி காரணமாக, கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இது அப்பகுதிகளில் நீர் விநியோகத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, பெர்லிஸின் டிமா டாசோ அணையில் நீர்மட்டம் குறைந்ததால், அணை கட்டப்பட்டபோது மூழ்கடிக்கப்பட்ட 'கம்போங் சஹாபாத்' பழைய சாலை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியே தெரிவது நிலமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

பெர்லிஸ் நீர்ப்பாசனம், வடிகால் துறை இயக்குநர் அமீர் புடிமான் அப்துல்லா இது குறித்துத் தெரிவிக்கையில், அணைப் பகுதிகளில் மழைப் பொழிவு மிகக் குறைவாக உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

தற்போதையச் சூழலில், அணையில் உள்ள நீர் குடிநீர் தேவை உள்ளிட்ட உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வழங்கப்படுவதாகவும், விவசாயத் தேவைகளுக்கு நீர் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் கெடா, பெர்லிஸின் பல பகுதிகளுக்கு 'நிலை 1' வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிக், பாடாங் தெராப் உள்ளிட்ட பகுதிகளில் தினசரி வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. 

கெடாவைப் பொறுத்தவரை மூடா, பெரிஸ், பெடு ஆகிய முக்கிய அணைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தற்போது பெடு அணையின் நீர்மட்டம் 85.10 மீட்டராக உள்ளது. இது ஆபத்தான கட்டமான 77.19 மீட்டரை விட அதிகமாக இருந்தாலும், மழையின்மையால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நிலைமை சீராகும் வரை பொதுமக்களும் விவசாயிகளும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset