நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசல் வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: சாலை வரியைக் குறைக்க அரசு திட்டம்

பத்து காவான்: 

டீசல் வாகனங்களுக்கான சாலை வரியைக் குறைப்பது தொடர்பான ஆய்வுக்கான ஒரு முன்மொழிவை, தேசிய பொருளாதார நடவடிக்கை சபைக்கு (எம்டென்) போக்குவரத்து அமைச்சு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாக இன்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தற்போதைய மானியத் திட்டங்களின் கீழ் வராத டீசல் வாகன உரிமையாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் விரிவான அணுகுமுறையை ஆராயும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்குள்ள சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜே.பி.ஜே.) 80வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய லோக், கடத்தலைக் கட்டுப்படுத்த டீசல் விலைகள் இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேறு வழிகளை அரசாங்கம் தேடி வருவதாக விளக்கினார்.

"எந்தவிதமான உதவி அல்லது மானியங்களையும் பெறாத டீசல் வாகன உரிமையாளர்களுக்கு உதவுவதற்காக, சாலை வரியைக் குறைப்பதன் அடிப்படையில் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதை நாங்கள் பார்ப்போம்" என்றார் அவர்.

தொடர்ந்து, அரசாங்கம் ஏற்கனவே இலக்கு மானியத் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் லோக் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக, மாதத்திற்கு 400 ரிங்கிட் வரை வழங்கும் தனிப்பட்ட பூடி டீசல் திட்டம், பேருந்துகள், லாரிகள் போன்ற வணிக வாகனங்களுக்கான ஃப்ளீட் கார்டு அமைப்பு அதில் அடங்கும். முன்மொழியப்பட்ட சாலை வரிக் குறைப்பு, இந்த வகைகளுக்கு வெளியே உள்ளவர்களை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த முன்மொழிவின் தாக்கங்களை மதிப்பிடுவதற்கான மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். அதில் பொருத்தமான குறைப்பு விகிதம், அரசாங்க வருவாயில் அதன் தாக்கம் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நிகழ்ச்சியில் முன்னதாக, டீசல் விலை உயர்வு சில பயனர்களின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை ஒப்புக்கொண்டு, பொருத்தமான வழிமுறையை அடையாளம் காணுமாறு போக்குவரத்து அமைச்சிடம் தாம் கேட்டுக்கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

அந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தில், MyJPJ ஸ்மார்ட் செயலி பயன்பாட்டின் ஒரு புதிய பதிப்பின் வெளியீடும், தேசிய பாடகி டத்தோ ஸ்ரீ சித்தி நூர்ஹாலிசா தாருதீன் சாலை பாதுகாப்பு ஐகானாக நியமிக்கப்படுவதும் இடம்பெற்றன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset