நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாயில் பரபரப்பு: அரிவாளுடன் மளிகைக் கடையில் புகுந்து கொள்ளையிட்ட நபர் கைது

நீலாய்: 

மந்தின், ஜாலான் பெசார் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில், மது வாங்குவதற்குப் பணம் இல்லாத காரணத்தால் அரிவாள் முனையில் கொள்ளையிட்ட 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபரை போலிசார் கைது செய்துள்ளனர். 

நேற்று காலை 11:10 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரிவாளுடன் கடைக்குள் புகுந்த அந்த நபர், அங்கிருந்த ரொக்கப் பணம், மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றார்.

இதனால் கடை உரிமையாளருக்கு சுமார் RM500 ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், நீலாய் மாவட்ட போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொள்ளையன் நீல நிற புரோட்டான் பெர்டானா ரக காரில் தப்பியோடியதை அறிந்த போலிசார், அதே நாள் இரவு 10:30 மணியளவில் சிலாங்கூர், காஜாங் அருகே உள்ள லெகாஸ் (LEKAS) நெடுஞ்சாலையில் வைத்து அவரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார், அரிவாள், கைப்பேசி, உடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

விசாரணையில் அவருக்கு ஏற்கனவே ஐந்து கொள்ளை வழக்குகள், இரண்டு போதைப்பொருள் வழக்குகள் என மொத்தம் ஏழு குற்றப் பின்னணிகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், சிறுநீர் பரிசோதனையில் அவர் 'மெத்தாம்பேட்டமைன்' (Methamphetamine) எனும் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. 

தற்போது அந்த நபர் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் 392, 397 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset