நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலி விடுதியில் கைவரிசை காட்டிய இந்தியச் சுற்றுலாப் பயணிகள்: சோதனையில் சிக்கிய பொருட்கள்

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் பாலித் தீவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நால்வர், அங்கிருந்த பொருட்களைத் திருடிய சம்பவம் இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

விடுதியிலிருந்து வெளியேறும் வேளையில், அவர்கள் கொண்டு வந்த பைகளை ஊழியர்கள் சோதனையிட்டபோது இந்தத் திருட்டுச் சம்பவம் அம்பலமானது.

பாலியின் உபுட் (Ubud) பகுதியில் உள்ள அந்த விடுதியில் கடந்த ஏப்ரல் 16 முதல் 19-ஆம் தேதி வரை தங்கியிருந்த அந்தச் சுற்றுலாப் பயணிகள், விடுதிக்குச் சொந்தமான துண்டுகள், கூந்தல் உலர்த்தும் இயந்திரம் (Hair dryer), குளியல் ஆடைகள், தரை விரிப்புகள், தொலைக்காட்சித் திரைக் கருவி (Remote) உள்ளிட்ட பல பொருட்களைத் தங்கள் பைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கியான்யார் மாவட்டக் காவல்துறை, இது தொடர்பாக எவ்விதப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. 

திருடப்பட்ட அனைத்துப் பொருட்களையும் அந்தச் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் விடுதி நிர்வாகத்திடமே ஒப்படைத்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சுமுக உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டது.

எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அந்தச் சுற்றுலாப் பயணிகள் விடுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சர்வதேச அளவில் இச்சம்பவம் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset