நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டீசல் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி: ஜூலை 2026 முதல் இந்தோனேசியாவில் 'பி50' அமல்

சுரபயா: 

எதிர்வரும் ஜூலை 1, 2026 முதல் டீசல் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த இந்தோனேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாமாயில் எனப்படும் பனை எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் 'பி50' (B50) உயிரி எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறுவதன் மூலம் இந்த இலக்கை எட்ட அந்நாடு திட்டமிட்டுள்ளது. 

50 விழுக்காடு டீசல், 50 விழுக்காடு கச்சா பனை எண்ணெய் கலவையைக் கொண்ட இந்த புதிய எரிபொருள் திட்டம், நாட்டின் எரிசக்தி சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு முன்னேற்றப் படியாகக் கருதப்படுகிறது.

இது குறித்து சுரபயாவில் உள்ள தொழில்நுட்பக் கழகத்தில் உரையாற்றிய அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் ஆண்டி அம்ரான் சுலைமான், "ஜூலை 2026 முதல் பி50 பயன்பாடு நடைமுறைக்கு வந்தவுடன், டீசல் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படும்" என்று உறுதிப்படத் தெரிவித்தார். 

பனை எண்ணெயை வெறும் டீசலாக மட்டும் அல்லாமல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களாகவும் மாற்ற முடியும் என்பதால், இது இந்தோனேசியாவின் எதிர்கால ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அரசுக்குச் சொந்தமான பி.டி.பி.என் (PTPN) எனும் தோட்ட நிறுவனத்துடன் இணைந்து சிறு அளவில் பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், எதிர்காலத்தில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் மூலம் பெருமளவில் எரிபொருள் உற்பத்தி செய்யப்படும்.

இந்த முயற்சி இந்தோனேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இறக்குமதிச் செலவைக் குறைத்து நாட்டின் எரிசக்தி எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset