நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலாக்கா நீரிணையில் வரி விதிப்பு விவகாரம்; இந்தோனேசியாவின் திட்டத்திற்குச் சிங்கப்பூர் எதிர்ப்பு

ஜகார்த்தா: 

உலகின் மிக பரபரப்பான கடல் வழித்தடங்களில் ஒன்றான மலாக்கா நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்குப் புதிய வரியை விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது. 

நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கான ஒரு புதிய ஆதாரமாக இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தோனேசிய நிதி அமைச்சர் புர்பாயா யுதி சதேவா இது குறித்துக் கூறுகையில், உலகளாவிய வர்த்தகம், எரிசக்தி போக்குவரத்தில் இந்தோனேசியா ஒரு முக்கியமான மையப் புள்ளியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். 

தற்போதைய நிலையில் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், நாட்டின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திப் பொருளாதாரப் பலன்களைப் பெற 'பயண வரி' (Transit Tax) போன்ற வழிமுறைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பொதுவான இந்த நீர்ச்சந்தி, இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் முக்கியத் நுழைவாக உள்ளது. 

வரி விதிப்புத் தொடர்பாக அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஹார்முஸ் நீர்ச்சந்தி, சூயஸ் கால்வாய் போன்ற பிற மூலோபாயப் பாதைகளை இதற்கு முன்னுதாரணமாகக் காட்டினார்.

இருப்பினும், இந்தோனேசியாவின் இந்த முயற்சிக்குச் சிங்கப்பூர் தனது ஆரம்பக்கட்ட எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மலாக்கா, சிங்கப்பூர் நீர்ச்சந்திகள் எவ்விதத் தடைகளும் இன்றி சுதந்திரமான போக்குவரத்துப் பாதையாகவே நீடிக்க வேண்டும் என்றும், அத்தகைய வரி விதிப்பு அல்லது போக்குவரத்துத் தடையை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியிலும் சிங்கப்பூர் இணையாது என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset