நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்

பெர்லின்: 

ஜெர்மனியின் எஸ்ஸன் நகரில் உள்ள குருத்வாராவில், இரு சீக்கிய குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக அந்நாட்டின் ‘பில்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

வெறும் வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தச் சம்பவம், சிறிது நேரத்திலேயே ஆயுதமேந்தியத் தாக்குதலாக மாறியது.
இந்தக் கலவரத்தின்போது கத்திகள், மிளகுத்தூள் தெளிப்பான் (Pepper Spray), துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

புனிதத் தலத்திற்குள் புகுந்து ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதில், இதுவரை 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மேலும், சீக்கியர்களின் புனித அடையாளங்களான தலைப்பாகைகள் கீழே விழுந்ததோடு, தற்காப்பிற்காக வைத்திருக்கும் 'கிர்பான்' எனப்படும் கத்திகளைக் கொண்டும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெர்மனி காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நீண்டகாலமாக நிலவி வரும் நிர்வாகச் சிக்கல்கள் அல்லது கொள்கை ரீதியான முரண்பாடுகள் இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

புனிதமான வழிபாட்டுத் தலத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம், ஜெர்மனியில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட சிலரைத் தடுப்புக் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மீண்டும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset