நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா நீரிணையை கடக்கும்  கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது

ஜாகர்த்தா:

மலாக்கா நீரிணையை கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது.

உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி புதன்கிழமை இந்த செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான இதை, தேசிய வருவாயின் புதிய ஆதாரமாக மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக வர்த்தகத்தில் இந்தோனேசியாவின் பங்கை அதிகரிப்பதற்கான ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் முயற்சியை இந்த முன்மொழிவு பிரதிபலிக்கிறது என்று நிதியமைச்சர் பூர்பாயா யுதி சதேவா கூறியதாக ஜகார்த்தா குளோப் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாகர்த்தாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், நாட்டின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் இருந்த போதிலும் கப்பல்கள் தற்போது எந்தக் கட்டணமும் செலுத்தாமல் இந்த நீர்வழியைக் கடந்து செல்கின்றன என்று வாதிட்டார்.

இந்தோனேசியா ஒரு ஓரங்கட்டப்பட்ட நாடு அல்ல. நாங்கள் முக்கியமான உலகளாவிய வர்த்தக மற்றும் எரிசக்தி வழித்தடங்களில் அமைந்துள்ளோம்.

ஆனாலும் மலாக்கா நீர்வழி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் பகிரப்படும் மலாக்கா நீர்வழி, இந்திய, பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் ஒரு முக்கிய கடல்வழிப் பாதையாகும்.

இது பெரும்பாலும் ஹோர்முஸ், சூயஸ், பனாமா போன்ற பிற மூலோபாய வழித்தடங்களுடன் ஒப்பிடப்படுகிறது.

மேலும் வரி வசூலிப்பதற்கான எந்தவொரு வழிமுறைக்கும் அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைப்பு தேவைப்படும் என்று பூர்பாயா குறிப்பிட்டார்.

மேலும் அந்த வழித்தடத்தில் இந்தோனேசியாவின் புவியியல் ரீதியான ஆதிக்கப் பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset