நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானின் ஆயுதப் புரட்சி: உலகச் சந்தையில் நுழையும் போர்க்கப்பல்களும் ஏவுகணைகளும்

டோக்கியோ: 

பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த பாதுகாப்பு ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தனது பாதுகாப்பு தளவாடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஜப்பான் இன்று அதிரடி அனுமதியை வழங்கியுள்ளது. 

இதன் மூலம் போர்க்கப்பல்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஜப்பானுக்கு வழி பிறந்துள்ளது. போருக்குப் பிந்தைய ஜப்பானின் 'அமைதி' கொள்கையிலிருந்து இது ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

உக்ரைன், மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால், அமெரிக்காவின் ஆயுத உற்பத்தியில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், ஐரோப்பிய, ஆசிய நாடுகள் தங்களின் ஆயுதத் தேவைகளுக்காக மாற்று நாடுகளைத் தேடி வருகின்றன.

இந்தச் சூழலை ஜப்பான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, போலந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஜப்பானிடமிருந்து ஆயுதங்களைப் பெற ஆர்வம் காட்டி வருகின்றன.

முதற்கட்டமாக, மணிலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பல்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் சனே டகாயிச்சி தலைமையிலான அரசு, இதற்கு முன்பு இருந்த ஐந்து வகைப்பாட்டுக் கட்டுப்பாடுகளை நீக்கி, இனி ஒவ்வொரு விற்பனை விண்ணப்பத்தையும் அதன் தகுதியின் அடிப்படையில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

மோதல்களில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது என்ற அடிப்படை விதிகளை ஜப்பான் இன்னும் கடைப்பிடித்தாலும், தேசிய பாதுகாப்பிற்குத் தேவையெனில் விதிவிலக்குகள் அளிக்கப்படலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு ஜப்பானின் பாதுகாப்புத் தொழில் துறையை உலக அளவில் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset