செய்திகள் சிந்தனைகள்
தமிழக தேர்தல் களம்: த வெ க வேட்பாளர்கள் வழிகாட்டுதலின்றி தவிக்கும் அவல நிலை
இந்தப் போர் களத்தில் விஜய் தனது த.வெ.க வேட்பாளர்களை ஆயுதங்கள் இல்லாமல் நிராயுதபாணியாக நிறுத்தி இருக்கிறார்.
ஆம், தேர்தல் களத்தில் பணம் என்பது ஒரு மிக முக்கிய ஆயுதமாகும். வேட்பாளர் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய ஓரு வாகனம் தேவை. அவரை பின் தொடரும் நண்பர்கள் கூட்டத்திற்கு தண்ணீர் பாட்டில்கள் குளிர்பானங்கள், காபி,டிபன், சாப்பாடு என்ற அடிப்படை செலவுகள் இருக்கிறது. கடைசி நேரத்தில் மட்டும் பூத் கமிட்டிக்கான செலவு மட்டுமே சுமார் 30 லட்சமாகும்.
ஆனால், தவெக வேட்பாளர்களில் வசதியுள்ள சிலரே இந்த போட்டியை எதிர் கொண்டு ஓரளவு செலவு செய்கிறார்கள். மற்ற பலர் தங்களுக்கான பிரச்சார வாகனத்திற்கு கூட செலவு செய்ய முடியாதவர்களாக உள்ளனர். உடன் வருபவர்களுக்கு சாப்பாடு, டிபன் ,காபி வாங்கித் தருவதற்கே சிரமப்படுகிறார்கள்.
எந்த முன் தயாரிப்புகளும், திட்டமிடல்களும், போதிய பணபலமும், ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையில் த.வெக வேட்பாளர்கள் களத்தில் தடுமாறுகிறார்கள். காரணம், விஜய் அரசியலை ஒரு பார்ட் டைம் வேலை போல கருதி கட்சி நடத்தி வருவது தான்.
கட்சித் தலைமையிடம் இருந்து எந்த பொருளாதார உதவியும் கிடைக்காததும், குறைந்தபட்ச வழி காட்டலோ, அக்கறை சார்ந்த கண்காணிப்போ இல்லாததால் அவரவர் சொந்த முயற்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.
திமுக, அதிமுகவினர் ஒவ்வொரு பாயிண்டிலும் கூடி நின்று வரவேற்பு தரும் பெண்களுக்கு நூறோ, இரு நூறோ தவறாமல் தருகின்றனர். அதை பெண்களும் எதிர்பார்க்கிறார்கள். வேட்பாளர் வரும் போது பூவை தூவுவதற்கும் தவறாமல் பணம் தந்து சந்தோஷப்படுத்துகிறார்கள். ஆனால், பெரும்பாலான தவெக வேட்பாளரால் இப்படி செலவு செய்ய முடியவில்லை.
ஆனாலும், பல இடங்களில் யதேச்சையாக பார்க்கும் பெண்களும், மக்களும், ”நாங்க விஜய் கட்சிக்கு தான் ஓட்டுப் போடுவோம். வாழ்த்துக்கள்” என ‘வாலியன்டிரியாக’ வந்து சொல்வதும் நடக்கிறது. சில இடங்களில் வேட்பாளரையே விஜய்யாக நினைத்து மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் கட்சிகள் மீதான அதிருப்திகளோடு,யாராவது நம்மை மீட்க வரமாட்டார்களா? என்ற ஏக்கமுமே மக்கள் விஜய்யை அதிகமாக நம்பக் காரணமாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு தவெக வேட்பாளர்கள் களத்தில் சந்திக்கும் பிரதான பிரச்சினை அந்தந்தப் பகுதி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுகவிற்கு விலை போய்விட்டது தான். இவர்கள் பிரசசாரத்திற்கு வராமலே ஒதுங்கி நிற்கின்றனர். பூத் கமிட்டி உறுப்பினர்களை வேட்பாளர் கண்ணில் கூடக் காட்டுவதில்லை. ஆனால், அந்த நிர்வாகிகள் எதிரணியுடன் நல்ல இணக்கம் பாராட்டுகின்றனர். இந்த துரோகத்தை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர், புதிய தவெக வேட்பாளர்கள்.
மற்றொரு பக்கமோ, தவெக வேட்பாளர்களே களத்தில் எதிரணியினருக்கு விலை போய் பிரச்சாரம் செய்ய வராமல் போக்கு காட்டி, தொண்டர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறார்கள். இதையெல்லாம் யார் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது என்றே தெரியாமல் விக்கித்து நிற்கின்றனர், உள்ளுர் நிர்வாகிகளும், தொண்டர்களும்..!
எடப்பாடி தொகுதியில் செங்கோட்டையன் அழுத்தமாக சிபாரிசு செய்ததன் மூலம் வாய்ப்பு பெற்ற வேட்பாளர் அருண்குமார் கடைசி நேரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக ஜகா வாங்கிய அசிங்கத்தை சரி செய்வதற்கு தன் மன்றத்தின் உறுப்பினரான சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாரை அழைத்து, தவெக ஆதரவு வேட்பாளராக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
பல தொகுதிகளில் தவெக வேட்பாளர் பெயர் கூட மக்களுக்கு தெரியவில்லை. ‘விஜய்யின் தவெகவுக்கு ஆதரவென்றால், விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’ என்ற புரிதலோடு உள்ளனர். ‘ஒரே ஒரு முறையாவது தன் தொகுதிக்கு விஜய் வந்து தன்னை மக்களுக்கு அறிமுகம் செய்து வாக்கு கேட்கமாட்டாரா?’ என்ற தவிப்பில் பல வேட்பாளர்கள் உள்ளனர். ஆனால், விஜய்யோ சில ஒத்துக் கொண்ட இடங்களுக்கு கூட பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருக்கிறார் என்பது தான் கூடுதல் சோகம்.
- சாவித்திரி கண்ணன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 6:27 pm
இதுவரை நடந்தது போதும் - Enough is enough: இஸ்ரேல் மீது டிரம்ப் பாய்ச்சல்
April 17, 2026, 8:11 am
சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள் - வெள்ளிச் சிந்தனை
April 16, 2026, 9:55 pm
பிரிட்டனை ஆபத்து நெருங்குகிறதா? - ஓர் அரசியல் பார்வை
April 12, 2026, 12:12 pm
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி முறிந்தது
April 10, 2026, 9:11 am
புன்னகைக்க மறக்காதீர்கள்: வெள்ளிச் சிந்தனை
April 8, 2026, 9:29 pm
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சமரசம் செய்து சாதித்தது பாகிஸ்தான்
April 3, 2026, 9:42 am
ஒழுங்கமைத்தல் என்பது இஸ்லாத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று - வெள்ளிச் சிந்தனை
April 1, 2026, 6:48 am
