நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தானில் பயங்கரம்: அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முதியவரை வெட்டிக்கொலை

தெலுக் இந்தான்:

பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான், பெக்கான் பாரு பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில், 69 வயது முதியவர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். 

அதிகாலை 6 மணி அளவில், அவரது மனைவி வீட்டின் முற்றத்தில் வழிபாட்டுச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் வீட்டின் சுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர்.

வீட்டிற்குள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த முதியவரை வழிமறித்த அந்தக் கும்பல், கத்திமுனையில் மிரட்டி நகைகளைத் தருமாறு கேட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவியையும் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். 

அப்போது ஏற்பட்ட மோதலில், கொள்ளையர்கள் தாக்கியதில் முதியவரின் இரண்டு கைகளிலும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகைகளுடன் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அளித்த ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் சுவா கோக் லியான், உயிரிழந்தவரின் மனைவி காயமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவித்தார். 

இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது இச்சம்பவம் குறித்துத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தையோ (05-6222222) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset