நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தப்பிக்க வழியின்றித் தவிக்கும் மக்கள்: போரினால் சிதைந்த சிரியாவிற்குத் திரும்பும் அகதிகள்

டமாஸ்கஸ்: 

லெபனான், இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் சுமார் 2 லட்சத்து 77 ஆயிரம் பேர் லெபனானிலிருந்து வெளியேறி சிரியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

இதில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், சுமார் 43 ஆயிரம் பேர் லெபனான் குடிமக்கள் என்றும் ஐநா அகதிகள் முகமை (UNHCR) உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் உள்கட்டமைப்புகள், இந்த திடீர் மக்கள் வருகையால் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. 

அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகச் சர்வதேச உதவிகளைச் சார்ந்துள்ள நிலையில், புதிதாக வரும் அகதிகளுக்குப் போதிய இடவசதியோ அல்லது மருத்துவ வசதிகளோ வழங்க முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, இங்கு வரும் மக்கள் பல ஆண்டுகள் போர், சமீபத்திய தாக்குதல்களால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

சிரியாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

அங்கு நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல்கள், சொத்து சேதங்கள் குறித்துச் சர்வதேசக் குழுக்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்தப் பதற்றமான சூழல் தொடர்ந்தால், சிரியாவின் மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, மனிதாபிமானத் தேவைகள் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. 

பேச்சுவார்த்தைகளின் மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம் என்றும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதே தற்போதைய முதன்மைத் தேவையாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset