செய்திகள் உலகம்
அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடற்கொள்ளைக்கு நிகரானது; நீங்கள் தாக்கினால் வளைகுடா நாடுகளின் துறைமுகங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்:
பாரசீக வளைகுடா அல்லது ஓமன் வளைகுடாவில் ஈரான் துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தத் துறைமுகமும் குறிப்பாக வளைகுடா நாடுகளின் துறைமுகங்கள் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களும் தடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்ததைத் தொடா்ந்து, ஈரான் இவ்வாறு எச்சரித்துள்ளது.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவந்த நிலையில், போரை 2 வாரத்துக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. 21 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கவும், ஹோா்முஸ் நீரிணையை அனைத்து நாடுகளின் கப்பல்களுக்குத் திறந்துவிடவும் அழுத்தம் அளிக்கும் நோக்கில், ஈரானின் அனைத்துத் துறைமுகங்கள், கடலோரப் பகுதிகள் திங்கள்கிழமை முதல் முடக்கப்படும் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்தது.
ஹோா்முஸ் நீரிணை வழியாக ஈரான் துறைமுகங்களுக்குப் பதிலாக வேறு துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களை அமெரிக்க படைகள் தடுக்காது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குறிப்பிட்டபடி கப்பல்களைத் தடுக்கும் நடவடிக்கை தொடங்கியதா என்ற விவரம் தெளிவாக வெளியாகவில்லை.
இந்த நடவடிக்கைக்குப் பதிலடி அளிக்கும் விதமாக ஈரான் ராணுவம், அந்நாட்டு புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானின் சட்டபூா்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கடமையாக ஈரான் ஆயுதப் படைகள் கருதுகின்றன. ஈரான் கடற்பரப்பில் தனது இறையாண்மை நிலைநாட்டப்படுவது ஈரானின் அடிப்படை உரிமையாகும்.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் ஈரான் கடற்பரப்பைப் பாதுகாக்கும் பணியைத் தொடர வேண்டும் என்பதில் ஈரான் படைகள் உறுதியாக உள்ளன.
ஏற்கெனவே தெரிவித்ததுபோல ஹோா்முஸ் நீரிணையில் ஈரானின் எதிரி நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் அனுமதிக்கப்படாது. அதேவேளையில், ஈரான் ஆயுதப் படைகளின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் வரை, பிற நாடுகளின் கப்பல்கள் அந்த நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும்.
அமெரிக்காவுடன் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், ஹோா்முஸ் நீரிணையை மேற்பாா்வையிட நிரந்தர வழிமுறையைத் தொடரவேண்டும் என்று ஈரான் கருதுகிறது.
கடற்கொள்ளைக்கு ஒப்பாகும்: சா்வதேச கடல் போக்குவரத்தில் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை; கடற்கொள்ளைக்கு நிகரானது. பாரசீக வளைகுடா அல்லது ஓமன் வளைகுடாவில் ஈரான் துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.
தற்போது ஈரான் துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்கள் பாதுகாப்பாக இருக்காது என்று அந்நாடு தெரிவித்துள்ளதன் மூலம், சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:06 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீன, ஈரானியக் கப்பல்களின் மர்மப் பயணம்
April 13, 2026, 3:04 pm
வங்காளதேசத்தில் பரபரப்பு: மத விவகாரத்தில் ஆன்மிகத் தலைவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்
April 13, 2026, 10:40 am
உலகின் மிக உயரமான 'பாழ்' கட்டிடத்திற்கு விடிவுகாலம்
April 12, 2026, 6:08 pm
