நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மைத்துனரைக் கழுத்தறுத்துக் கொன்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஈப்போ: 

ஈப்போ, மேடான் லஹாட் பகுதியில் தனது சொந்த மைத்துனரைக் கழுத்தறுத்துக் கொலை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 20 ஆண்டு காலச் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 29-ஆம் தேதிக்குள் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் ஈப்போ உயர் நீதிமன்றம் முதலில் மரண தண்டனை விதித்திருந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, உயிரிழந்தவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, காவல்துறையினரின் உத்தரவு எனக் கூறிக்கொண்டு, சந்தேக நபரின் குடும்பத்தினர் கொலை நடந்த இடத்தில் இருந்த இரத்தக் கறைகளைச் சுத்தம் செய்து தடயங்களை மறைக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. 

மேலும், இவ்வழக்கு தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இறுதியில், குற்றவியல் சட்டத் தொகுப்பின் 302-வது பிரிவின் கீழ் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, தண்டனையானது 304-வது பிரிவின் கீழ் மாற்றியமைக்கப்பட்டது. 

இதன்படி, அந்த நபருக்கு அவர் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset