செய்திகள் மலேசியா
சட்டவிரோத எல்லைக் கடப்பு: பள்ளிக்குச் செல்ல முற்பட்ட 34 மாணவர்கள் தடுத்து நிறுத்தம்
ரந்தாவ் பஞ்சாங்:
கிளாந்தான், கோலோக் ஆற்றின் வழியாகச் சட்டவிரோதப் பாதையைப் பயன்படுத்தித் தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 34 பள்ளி மாணவர்களைப் பொது நடவடிக்கைப்படையினர் (PGA) தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.30 மணியளவில் எல்லையோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரக் கண்காணிப்பின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் 22 மாணவர்களும், 12 மாணவிகளும் அடங்குவர். 7 முதல் 16 வயதிற்குட்பட்ட இவர்கள் அனைவரும் மலேசியக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தாய்லாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் வசித்து வந்தாலும், மலேசியாவின் ரந்தாவ் பஞ்சாங் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். முறைப்படியான எல்லைச் சாவடிகளைப் பயன்படுத்தாமல், சட்டவிரோதப் படகுத் துறைகள் வழியாக ஆற்றைக் கடந்ததால் இவர்கள் அதிகாரிகளிடம் சிக்கினர்.
இது குறித்துப் பேசிய தென்கிழக்கு படைப்பிரிவு கமாண்டர் அஹ்மத் ராட்ஸி ஹுசைன், எல்லைக் கடப்பு விவகாரத்தில் மாணவர்களுக்கு எனத் தனிப்பட்ட விலக்குகள் எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்படாத பாதைகள் வழியாக எல்லை தாண்டுபவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடப்பதைத் தவிர்க்கவும், நாட்டின் பாதுகாப்பு விதிகளை மதிக்கவும் எல்லைப்பகுதி மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பாதுகாப்புப் படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் எல்லையோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 2:10 pm
தேசிய முன்னணியா? தேசியக் கூட்டணியா?; மஇகா தலைமைத்துவம் நல்ல முடிவை எடுக்கும்: டத்தோ மோகன்
April 12, 2026, 12:18 pm
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
April 12, 2026, 11:57 am
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
April 12, 2026, 11:42 am
