நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புதிய உத்தி: ஜாசினில் மார்டி நிறுவனத்தின் 'சாகா' இனக் கோழி வளர்ப்புத் திட்டம்

மலாக்கா: 

மலேசிய வேளாண் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (MARDI), ஜாசின் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் 'சாகா' (Saga) இனக் கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 3,64,200 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

நவீன விவசாயத் தொழில்நுட்பங்களைப் பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பதன் மூலம், கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பயனாளிகளில் ஒவ்வொருவருக்கும் தலா RM18,210 ரிங்கிட் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில் கோழி வளர்ப்புக்கான கூண்டு உள்கட்டமைப்புகள், 100 சாகா இனக் கோழிக் குஞ்சுகள், தீவனம், மருத்துவத் தடுப்பூசிகள், இதர உபகரணங்கள் அடங்கும். 

மார்டி (MARDI) நிறுவனத்தின் நீண்டகால ஆராய்ச்சியில் உருவான இந்த உயர்தரக் கோழி இனம், இறைச்சி, முட்டை உற்பத்தியைப் பெருக்கி, குடும்ப வருமானத்தை அதிகரிக்க உதவும் என அந் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மத் ஜபாவி தெரிவித்தார்.

ஜாசின், கம்போங் சின்சின் ஹுலு பகுதியில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் அரசியல் செயலாளர் யுஹைசாத் அப்துல்லா கலந்துகொண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜாசின் பகுதியில் உள்ள இரண்டு தொழுகை இல்லங்களை மேம்படுத்துவதற்காக 30,000 ரிங்கிட் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளவும், உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் இத்தகைய தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் அவசியம் என விழாவில் வலியுறுத்தப்பட்டது. 

இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுவதைக் கண்காணிக்கவும், பயிற்சியளிக்கவுமெனத் தனியாக RM30,000 ரிங்கிட் நிதியைப் பயன்படுத்தி மார்டி நிறுவனம் தொடர்ந்து வழிகாட்டும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset