நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலையிடத்திலேயே கைவரிசை: 26 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கடிகாரங்களைத் திருடிய ஊழியருக்கு சிறை தண்டனை

கோலாலம்பூர்: 

புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள சொகுசு கடிகாரக் கடையில் பணிபுரிந்த 24 வயது ஊழியர் ஒருவர், 26 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 12 விலையுயர்ந்த கடிகாரங்களைத் திருடிச் சென்ற 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட அந்த இளைஞருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், 'பாடெக் பிலிப்' (Patek Philippe), 'ரோலக்ஸ்' (Rolex), 'ரிச்சர்ட் மில்லே' (Richard Mille) போன்ற உலகப் புகழ்பெற்ற முத்திரைகளைக் கொண்ட கடிகாரங்களை அந்த ஊழியர் திருடிச் சென்றுள்ளார். 

சக ஊழியர் ஒருவர் காட்சி அறையில் இருந்த கடிகாரங்கள் காணாமல் போனதைக் கவனித்த பிறகு, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேக நபர் கடிகாரங்களைத் தனது பையில் போட்டுக்கொண்டு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், ஏப்ரல் 1-ஆம் தேதி டாமன்சாரா பகுதியில் உள்ள வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் வைத்து அந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். 

அவரிடமிருந்து திருடப்பட்ட கடிகாரங்களும், அவற்றை அடகு வைத்ததற்கான ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக, அந்தப் பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே சந்தேக நபரின் நண்பர் ஒருவர் ஏழு கடிகாரங்கள் அடங்கிய பையை ஒப்படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றவியல் சட்டத்தின் 381-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகச் செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் முஹம்மத் ரோஸ்டி தாவூத் உறுதிப்படுத்தியுள்ளார். ஊழியர் ஒருவரே வேலையிடத்தில் திருட்டில் ஈடுபட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset