செய்திகள் மலேசியா
மலேசியா, வங்காளதேசம் இடையே தொழிலாளர் சந்தையை மீண்டும் திறக்க இணக்கம்: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
மலேசியாவின் பல்வேறு பொருளாதாரத் துறை சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வங்காளதேசத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புச் சந்தையை விரைவாக மீண்டும் திறக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், வங்காளதேசத்தின் தொழிலாளர், வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் ஆரிபுல் ஹக் சௌத்ரி ஆகியோருக்கு இடையே புத்ராஜெயாவில் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தையில் இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, ஆள்சேர்ப்புச் செயல்முறையில் நிலவும் கட்டமைப்புச் சவால்களைக் களைந்து, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்கள் மீதான நிதிப் பளுவைக் குறைக்க இரு நாடுகளும் உறுதியளித்தன.
குறிப்பாக, தகுதியான, நம்பகமான முகமைகளை மட்டுமே பயன்படுத்துவதுடன், ஏற்கெனவே மலேசியா வர முடியாமல் காத்திருக்கும் தொழிலாளர்களின் நிலையைச் சீரமைக்க முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவின் அனைத்துலக நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில், நியாயமான, வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
தொழிலாளர் ஆள்சேர்ப்பில் புரட்சிகரமான மாற்றமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான புதிய முறையை அறிமுகப்படுத்த மலேசியா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விளக்கிய அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் கொள்கைப்படி, தொழிலாளர்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்பதையும், அனைத்துச் செலவுகளையும் முதலாளிகளே ஏற்க வேண்டும் என்பதையும் இத்தொழில்நுட்பம் உறுதி செய்யும் என்றார்.
வங்காளதேசத் தரப்பு மலேசியாவின் இந்த மின்னணுமயமாக்கல் முயற்சிக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், மற்ற நாடுகளுக்கும் இது ஒரு முன்மாதிரியாக அமையும் என்று பாராட்டியது.
மேலும், மனிதக் கடத்தல் தொடர்பான சட்டச் சிக்கல்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், சந்தை தேவைக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்தவும் திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் சான்றிதழ் பெறுதல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
நிறைவாக, இந்த விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் சீரான இடைவெளியில் ஆலோசனைகளை மேற்கொண்டு நெருக்கமான உறவைத் தொடர இணக்கம் காணப்பட்டது.
மலேசிய அரசாங்கம் வழங்கிய அன்பான உபசரிப்பிற்கும், புத்ராஜெயாவில் இந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்ததற்கும் வங்காளதேசத் தூதுக்குழு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது.
இந்த முக்கியப் பேச்சுவார்த்தையில் மலேசியத் தரப்பில் அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணனும், வங்காளதேச தரப்பில் அமைச்சர் ஆரிபுல் ஹக் சௌத்ரி, அந்நாட்டுப் பிரதமரின் ஆலோசகர் மஹ்தி அமீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 10:56 pm
மலேசியா நெருக்கடியில் உள்ளது; விலை உயர்வை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்: பிரதமர்
April 9, 2026, 10:55 pm
மலேசியா சுத்திகரிக்கப்பட்ட நீரில் 30 சதவீதத்திற்கும் மேல் இழக்கிறது: துணைப் பிரதமர்
April 9, 2026, 10:52 pm
சுங்கை சிப்புட்டில் எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்
April 9, 2026, 5:44 pm
ஆண் குழந்தை வீட்டின் வெளியே சோபாவில் கண்டுபிடிக்கப்பட்டது
April 9, 2026, 5:36 pm
நங்கூரக் கயிற்றில் சிக்கி ஆண் உயிரிழந்தார்
April 9, 2026, 5:14 pm
“ஆண்டு இறுதிவரை நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது”: டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு
April 9, 2026, 5:00 pm
