செய்திகள் சிந்தனைகள்
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சமரசம் செய்து சாதித்தது பாகிஸ்தான்
உலகின் மிகப் பழமை வாய்ந்த பாரம்பரியத்திற்கு சொந்தமான நாடு ஈரான்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடிமக்கள் என தமிழர்களைப் போலவே ஈரானியர்களும் கருதப்படுகிறார்கள். முன்னொரு காலத்தில் இந்த நாட்டை பாரசீகம் என அழைத்தனர். கலை, இலக்கியம், நாகரீகம் அனைத்திலும் செழுமை வாய்ந்த நாடு.
இது மட்டுமின்றி உலகின்இரண்டாவது மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளத்தை தன்னகத்தே கொண்டது. உயர்ந்தோங்கிய மலைகள், மலைகளின் மீது கட்டப்பட்ட மன்னர் கால கோட்டைகள் என அழகிய பூமி ஈரான்.
புவிசார் அரசியல் ரீதியாக ஈரானின் அமைவிடம் முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தி வாய்ந்த இராணுவம் மட்டுமின்றி, அரபு நாடுகளிடையே பிராந்தியச் செல்வாக்கு உள்ளது.
இப்பேர்பட்ட ஒரு நாட்டை – ஒரு பாரம்பரிய கலாச்சார வளத்தை ஒரே இரவில் அழித்து தரைமட்டமாக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த அறிப்பை கண்டு அகிலமே அதிர்ந்தது. ஆனால், ஈரானோ இம்மியும் அசரவில்லை. ’’தைரியம் இருந்தால் குண்டு போட்டுக் கொள். ஆனால், அப்படி நடந்து விட்டால் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையே இருக்காது’’ என ஈரான் மக்கள் வீதியில் இறங்கி கொந்தளித்தனர்.
ஈரான் அதிபர் மசூத் பேஸிஸ்க்கிங் “ஈரானைப் பாதுகாக்க 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தன்னார்வமாக போருக்கு முன் வந்துள்ளனர்; நானும் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்யத் தயார்” என்று அவர் X தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஈரானின் அச்சமற்ற தைரியத்தை காட்டியது.
அவ்வளவு தான் டிரம்ப்.. ஆடிப் போய்விட்டார்.!
நம்முடைய அறிவிப்பை இப்படித் துச்சமாக உதாசீனப்படுத்திவிட்டார்களே..!
இந்தச் சூழலில் தான் அமெரிக்காவை துல்லியமாக கணித்து ஒரு சமரச ஏற்பாட்டைச் செய்துள்ளது பாகிஸ்தான்.
இதற்கு மேலும் ஈரானை மிரட்டிப் பயனில்லை. அப்படி ஈரானை ஈசியாக அழித்துவிடத் துணிந்தால், அதற்கு பிறகு அமெரிக்காவிற்கு ஆயுள் வரை அது அச்சுறுத்தலாகவும் தொடரும்.
இந்த போர் நிறுத்ததை ஈரான் இப்படி இறுமாப்புடன் அறிவித்துள்ளது;
"நாட்டுக்கு மக்களுக்கு ஒரு நற்செய்தி, இந்தப் போரில் நமது ஈரான் முழுமையான வெற்றியை நெருங்கி விட்டது. கையறு நிலைக்கும், நிரந்தரத் தோல்விக்கும் அமெரிக்காவை உள்ளாகிய பிறகு, போரின் அனைத்து நோக்கங்களும் எட்டப்பட்டு விட்டன, அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நிறுத்ததிற்காக கெஞ்சுகிறது. இதோ நாம் நிபந்தனையுடன் தற்காலிக போர் நிறுத்ததிற்கு வந்துள்ளோம்.’’என்றது, ஈரான்.
இத்தகு வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றதற்கு காரணம், அது அமெரிக்காவுடன் பேணிய நட்பு மாத்திரமல்ல, மற்றொரு வல்லரசான சீனாவுடனும் சிறப்பான நட்பை பேணி வருகிறது, பாகிஸ்தான். ஈரான் விவகாரத்தில் சீனாவும் மிக உன்னிப்பாக நிலைமைகளை கண்காணித்து வந்தது. பாகிஸ்தானின் அமைதி தூதுக்கு பின்னணியில் சீனாவும் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த சமரச ஏற்பாட்டை உருவாக்கியதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளது பாகிஸ்தான்.
உலகின் ஒரு மாபெரும் அழிவுப் போரைத் தடுத்துள்ளது.
உலகின் ஒரு பாரம்பரியமிக்க வளமான கலாச்சாரத்தை காப்பாற்றி உள்ளதோடு அமெரிக்காவையும் சேர்த்தே காப்பாற்றி உள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக விளங்கும் ஸ்ட்ரைட் ஆப் ஹோர்முஸ் திறக்கப்பட்டு, அதன் மூலம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பயன்பெற வழிவகுத்துள்ளது.
சர்வதேச ரீதியில் தடைபட்டிருந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி கோலியுள்ளது.
இத்தகு உன்னதமான பணியைச் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருக்கு அந்த குறிப்பிட்ட இரண்டு நாடுகள் மட்டுமின்றி உலகமே கடமைப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமாபாத் ஒரு பாலமாகச் செயல்பட்டதை ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் மிகுந்த நன்றியுடன் உறுதிப்படுத்தியது.
பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்த ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு தமது நாட்டின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி ஒப்புதல் அளித்துள்ளதையும் தெரிவித்துள்ளது.
இந்த நிபந்தனைகளில் குறிப்பிடத்தக்கன;
ஈரான் ராணுவத்தின் மேற்பார்வையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பது,
அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்துவது,
பிராந்தியத்தில் உள்ள அனைத்து தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் வெளியேறுவது,
போர்ச் சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்குவது
ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவது.
இந்த நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா எங்களிடம் ஒப்புக் கொண்டால் போதாது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஈரான் திட்டவட்டமாக கோரியுள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10 (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நமது காங்கிரஸ் அரசு இருந்திருக்குமானால் இத்தகு பெருமையை பாகிஸ்தான் தட்டிச் செல்வதற்கு முன்பு தானே செய்திருக்கும்.
ஏனென்றால், நமக்கும் ஈரானுக்கும் உள்ள தொடர்பு ஈராயிரம் ஆண்டு பழமையானது. நவீன காலத்திலும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் மிக நெருங்கிய நண்பனாகவே ஈரான் இருந்துள்ளது.
இந்தியாவிற்கும் – பாகிஸ்தானுக்குமான பிரச்சினைகளில் ஈரான் ஒரு போதும் பாகிஸ்தான் சார்பு நிலை எடுக்கவில்லை. ஜவகர்லால் நேரு அணிசேரா நாடுகள் கூட்டமைப்பை கட்டமைத்த போது அதில் கைகோர்த்துக் கொண்ட நாடு. தற்போதும் கூட இந்தியாவுடன் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பங்கு வகிக்கிறது. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தான் கிடையாது. பல சமயங்களில் ஐ. நா. சபையில் இந்தியாவின் நிலைபாட்டை ஆதரித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவிற்கு அதிகமாக கச்சா எண்ணெயை தொடர்ந்து தந்து கொண்டிருந்த நாடு.
ஆனால், என்றைக்கு இந்தியாவில் பாஜக அரசு மோடி தலைமையில் பொறுப்பேற்றதோ.., அப்போது முதல் ஈரான் உடனான தொடர்புகளை குறைக்க ஆரம்பித்தது. கச்சா எண்ணெய் இறக்குமதியையும் நிறுத்தியது. (தற்போது மீண்டும் கெஞ்சி பெற்றுள்ளது). அத்துடன் இஸ்லாமியர்களின் பகைவனாக மட்டுமல்;ல, மனித குல பகைவனான இஸ்ரேல் நாட்டுடன் அதிகமாக இணக்கம் பாராட்டியது.
இதன் உச்சமாக அமெரிக்காவும், இஸ்ரேலும் வலிந்து ஈரான் மீது குண்டு போட்ட போது அதை கண்டிக்கத் துப்பில்லாமல் கனத்த மெளனம் காட்டியது. இந்த சிறுமை குணத்தால் இந்தியா தன் பெருமையை இழந்து நிற்கிறது.
இந்தியா எந்த பாகிஸ்தானை பகை நாடாகவும் , பயங்கரவாத நாடாகவும் உலக அரங்கில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததோ, அதை ஒரே நாளில் அடித்து நொறுக்கி, இமயமென உயர்ந்து விட்டது பாகிஸ்தான்.
பாகிஸ்தானை இனி நாமும் நட்பு நாடாக பார்த்து வெறுப்பையும், வன்மத்தையும் வேரறுத்து மானுடம் செழிக்க ஒன்றுபட வேண்டும்.
- சாவித்திரி கண்ணன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 9:42 am
ஒழுங்கமைத்தல் என்பது இஸ்லாத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று - வெள்ளிச் சிந்தனை
April 1, 2026, 6:48 am
அமெரிக்க வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சரிவு இன்று நிகழ்ந்திருக்கிறது
March 27, 2026, 9:42 am
துன்பத்திற்குப் பிறகு விடிவு இருக்கத்தான் செய்கிறது - வெள்ளிச் சிந்தனை
March 22, 2026, 7:57 am
அமெரிக்காவின் வல்லரசு பிம்பம் ஈரான் தகர்த்தெறிந்தது
February 27, 2026, 7:09 am
இறைவனிடம் எதுவரை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்? எங்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
February 20, 2026, 11:49 am
பூத்து வருகிறது, புண்ணிய மாதம் - வெள்ளிச் சிந்தனை
February 13, 2026, 11:57 am
