நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலானின் ஒற்றுமையே மடானி அரசாங்கத்தின் அஸ்திவாரம்; உட்கட்சிப் பூசல்களைத் தவிர்ப்போம்: டத்தோஸ்ரீ ரமணன்

ஜொகூர் பாரு:

கெஅடிலான் கட்சிக்குள் நிலவும் தேவையற்ற உள்விவகாரங்களும் மோதல்களும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது.

அக்கட்சியின் தேசிய உதவித் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஜொகூர் மாநில கெஅடிலான் மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் ஆற்றிய உரையில்,

கட்சியின் பலம் என்பது தனிநபர் விமர்சனங்களில் இல்லை, மாறாக அனைத்து நிலைகளிலும் பேணப்படும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தில்தான் அடங்கியுள்ளது.

கட்சியின் கொள்கைகளையும் தலைமையையும் பகிரங்கமாக விமர்சிக்கும் போக்கு, எதிர்தரப்பினர் தங்களுக்குச் சாதகமாகச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும்.

குறிப்பாக, சமீபகாலமாக கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரபிசி ரம்லி கட்சிக்கு எதிராக முன்வைத்து வரும் விமர்சனங்களை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய போக்குகள் கட்சியின் ஒற்றுமையைச் சீர்குலைக்கக்கூடும் என்பதைத் தொனிக்கும் வகையில் பேசினார்.

தற்போது நாம் ஒருவருக்கொருவர் வெளியில் அறிக்கை போர் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல. கட்சியில் நிலவும் எத்தகைய கருத்து வேறுபாடுகளாக இருந்தாலும், அவை உள்வழிகள் மூலம் மட்டுமே விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். என்று ரமணன் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது ஆளும் கட்சியின் பிரதான கடமை என்பதால், அதற்கு உட்கட்சி ஒற்றுமை மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மனிதவள அமைச்சருமான ரமணன், ஜொகூர் மாநில கெஅடிலான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் எதிர்வரும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள இப்போதிருந்தே தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset