நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“விலை உயர்வைக் கண்காணிக்க 'ப்ரைஸ் கேட்சர்' PriceCatcher செயலியைப் பயன்படுத்தவும்”: டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில்

கோலாலம்பூர்: 

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் ஏற்படும் அறைகூவல்களை எதிர்கொள்ளவும், மக்களின் நலனைப் பாதுகாக்கவும் மலேசிய அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார். 

கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும், தகவல் தொடர்பு துணை அமைச்சருமான தியோ நீ சிங் உடன் இணைந்து நேற்றிரவு கூலாயில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நமது கட்டுக்கோப்பான செயல்பாடும், ஒத்துழைப்புமே மலேசியாவின் பலம் என்று அவர் குறிப்பிட்டார். எந்தவொரு தடையையும் எதிர்கொண்டு நாடு நிலைத்தன்மையுடனும், வலிமையுடனும் முன்னேறும் என்று தனது சமூக ஊடகப் பதிவில் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைச் சரிபார்க்க 'ப்ரைஸ் கேட்சர்' (PriceCatcher) செயலியைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவு அமைச்சினால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, சந்தை, பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் 480-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைப் பட்டியலை உடனுக்குடன் வழங்குகிறது. இதன் மூலம் பொதுமக்கள் புத்திசாலித்தனமாகப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

தற்போது பால், குழந்தைப் பொருட்கள், தூய்மைப் பொருட்கள், பானங்கள் உள்ளிட்ட ஆறு முக்கியப் பிரிவுகளின் கீழ் விலைகள் கண்காணிக்கப்படுகின்றன.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் ஏற்படும் விலை உயர்விலிருந்து சாமானிய மக்களைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset