நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உத்தரகண்டில் பரபரப்பு: உணவு உட்கொண்டிருந்தபோது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

பௌரி: 

உத்தரகண்ட் மாநிலத்தின் பௌரி மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று தாக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை உள்ளூர் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்ரா பகுதியில் உள்ள பட்கோட் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில், திரிஷ்டி ராவத் என்ற அந்தச் சிறுமி தனது சகோதரி, பாட்டியுடன் வீட்டில் உணவு உட்கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சிறுத்தை ஒன்று திடீரென சிறுமியைப் பிடித்துக்கொண்டு, காட்டுக்குள் இழுத்துச் சென்றதாக போலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராம மக்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கடுமையாகக் காயமடைந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
போலிஸ் அதிகாரிகளும் வனத்துறையினரும் சம்பவ இடத்தை வந்தடைந்தனர்.

எனினும், கோபமடைந்த கிராம மக்கள் மூத்த அதிகாரிகள் வர வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர்.

மேலும், சம்பவ இடத்திலிருந்து உடலை வெளியே எடுத்துச் செல்வதிலிருந்து அதிகாரிகளைத் தடுத்தனர்.

வெள்ளிக்கிழமை காலையில், சிறுபிரிவு மாஜிஸ்திரேட் ரேகா ஆர்யாவுடன் வன அதிகாரி மஹாதிம் யாதவ் ஆகியோர் கிராமத்திற்கு வந்தனர். குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைப்பதற்கு முன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

யாதவ், சிறுமியின் குடும்பத்தினரையும் சந்தித்து, நடைமுறைகளின்படி அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிறுத்தையைக் கண்காணிக்க வனத்துறை விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சிறுத்தையின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, போக்ரா, பிரோன்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த மாவட்ட கல்வி அதிகாரி மனோஜ் குமார் ஜோஷி, மாவட்ட மாஜிஸ்திரேட் ஸ்வாதி எஸ். பதௌரியாவின் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் பாதுகாப்பு கருதி ஏப்ரல் 4, 6 ஆம் தேதிகளில் மூடப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset