நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 மாதத் திட்டம் இனி 45 நாட்களில்:  உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பெட்ரோனாஸின் அதிரடி நடவடிக்கை

கோலாலம்பூர்: 

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக, பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) முன்பிருந்த மூன்று மாதங்களிலிருந்து தனது கீழ்நிலை தயார்நிலை திட்டமிடல் காலகட்டத்தை 45 நாட்களாக குறைத்துள்ளது.

பெட்ரோனாஸ் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஸ்ரீ தெங்கு முஹம்மத் தவ்ஃபிக் தெங்கு அஜிஸ், இந்த நடவடிக்கையானது விநியோக சங்கிலியில் எற்படும் இடையூறுகளுக்கு நிறுவனத்தை மிகவும் விரைவாகவும் பதிலளிக்கும் முறையிலும் செயல்படுத்த உதவுவதாக கூறினார்.

உலகளாவிய புவிசார் அரசியல் அபாயங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட உடனடி தணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த காலகட்ட மாற்றம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆர்ட்டிஎம் TV1-ல் ஒளிபரப்பான "பிச்சாரா நாரடிஃப் காஸ்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வது" சிறப்பு நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் விளக்கமளித்த தெங்கு முஹம்மத் தவ்ஃபிக், கச்சா எண்ணெய் கொள்முதல், சுத்திகரிப்பு, தளவாடம் முதல் பெட்ரோல், டீசல், திரவ பெட்ரோலியம் எரிவாயு (LPG), விமான எரிபொருள் போன்ற தயாரிப்புகளை விநியோகிப்பது வரையிலான எரிசக்தி சங்கிலி முழுவதையும் உள்ளடக்கிய நடவடிக்கையின் தயார்நிலை அளவையும் பெட்ரோனாஸ் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

"சுத்திகரிப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய கீழ்நிலையில், விநியோக இடையூறு ஏற்பட்டால் நடவடிக்கை உகந்த நிலையில் தொடர்வதை உறுதிப்படுத்துவதற்காக பராமரிப்பு பணிகளைச் செயல்படுத்த சரியான நேரத்தை மறுபரிசீலனை செய்யும் அணுகுமுறையையும் கடைப்பிடிக்கிறோம்" என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், மே 2026 இறுதி வரை மலேசியாவிற்கு உள்நாட்டு எரிபொருள் விநியோக உத்தரவாதம் இருப்பதாகவும், அந்த காலகட்டத்திற்குப் பிறகும் விநியோக தொடர்ச்சியை உறுதிப்படுத்த தணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மாற்று மூலங்களிலிருந்து விநியோகம் பெறும் முயற்சிகள் "மிகவும் முன்னேறிய" நிலையை அடைந்திருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து, விநியோக பாதுகாப்பை நிவர்த்தி செய்வது வெறும் விநியோக கண்ணோட்டத்திலிருந்து மட்டுமல்ல, தேவையை நிர்வகிப்பதில் நுகர்வோரின் ஒத்துழைப்பும் தேவை என்று அவர் கூறினார்.

"பீதி கொள்முதல் அல்லது விநியோகத்தை 'மறைத்து வைப்பதை' தவிர்க்க வேண்டும். விநியோக நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் நுகர்வோருக்கும் பொறுப்பு உள்ளது.

"சந்தையைப் பாதிக்கக்கூடிய மறைத்து வைக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, குறிப்பாக அதிகாரிகளால் அமலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன" என்று அவர் கூறினார்.

தற்போதைய உலக பதற்றங்களை விவரித்த அவர், உலகளாவிய எரிசக்தி அமைப்பில் நிச்சயமற்ற தன்மை புதியதல்ல, மாறாக அரசாங்கம், தொழில்துறை, சர்வதேச நாடுகளால் கூட்டாக நிர்வகிக்கப்பட வேண்டிய யதார்த்தத்தின் ஒரு பகுதியாகியுள்ளது என்று கூறினார்.

1974-இல் நிறுவப்பட்டதிலிருந்து சூயஸ் நெருக்கடி (1956), எரிசக்தி நெருக்கடி (1973-74), ஈரான்-ஈராக் மோதல் உட்பட பல சவாலான உலக சுழற்சிகளை பெட்ரோனாஸ் கடந்து வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"தொடர்ந்து வரும் இவ்வாறான நெருக்கடிகளைச் சமாளிக்கும் பெட்ரோனாஸின் திறன் குறிப்பிட்ட நபர்கள் அல்லது உயரிய நிர்வாகத்தை மட்டுமே சார்ந்திருக்கவில்லை, மாறாக நிறுவனம் தொடங்கியதிலிருந்து அதன் ஊழியர்கள் அனைவரின் பங்களிப்பின் விளைவுமாகும்" என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset