நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா பாருவில் எட்டு வீடுகள் எரிந்தன

கோத்தா பாரு: 

வெள்ளிக்கிழமை இங்குள்ள சாபாங் திகா, கெடாய் புலோவில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வீடுகள் எரிந்தன, மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சுமார் 30 வரை கருகி அவற்றில் சில வெடித்தன.

இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சம்பவம், அடர்த்தியான குடியிருப்புப் பகுதியில் வேகமாகப் பரவியது. அந்தப் பகுதியில் பெரும்பாலும் மரக் கட்டமைப்புகள் இருந்தன.

மேலும், குடியிருப்பாளர்களின் சொந்தமான சில பட்டாசுகளும் வெடித்தன.

கிளந்தான் மாநில மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் நடவடிக்கை மேலாண்மை, நிலையப் பிரிவுத் தலைவர், தீயணைப்பு அதிகாரி முஹம்மத் பரிட் இஸ்மாயில், இந்தச் சம்பவம் குறித்த அவசர அழைப்பு இரவு 9.55 மணிக்குத் தங்களுக்குக் கிடைத்ததாகவும், அதற்குச் சுமார் ஒரு நிமிடத்தில் முதல் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்தை வந்தடைந்ததாகவும் தெரிவித்தார்.

"தீயில் மொத்தம் எட்டு வீடுகள் சிக்கியுள்ளன. அவற்றில் ஐந்து வீடுகள் 100 சதவீதம் எரிந்து சாம்பலாயின, மூன்று வீடுகள் பகுதியளவு எரிந்தன."

"வீடுகளின் கட்டமைப்புகள் பெரும்பாலும் மரத்தால் ஆனதும், வீடுகளுக்கிடையேயான இடைவெளி குறைவாக (ஒரு மீட்டருக்குக் குறைவான தூரம்) இருந்ததுமே தீ வேகமாகப் பரவக் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது" என்று சம்பவ இடத்தில் அவர் கூறினார்.

பலத்த காற்றும் அடுத்தடுத்த வீடுகளுக்கு தீ வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக அமைந்ததாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தில், ஒரு தொயோத்தா ஹிலுக்ஸ் நான்கு சக்கர வாகனமும், ஒரு மோட்டார் சைக்கிளும் எரிந்தன.

"மேலும், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததும், தீ மேலும் வேகமாகப் பரவி ஆரம்ப கட்டத்தில் தீயணைப்புப் பணிகளைக் கடினமாக்கியது" என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தீ மேலும் பரவாமல் தடுப்பதில் தீயணைப்புத் துறை வெற்றி அடைந்ததாகவும், அருகிலுள்ள பல வீடுகள் அழியாமல் காப்பாற்றப்பட்டதாகவும் முஹம்மத் பரிட் தெரிவித்தார்.

தீயணைப்புப் பணிகளில் கோத்தா பாரு, பெங்காலான் செப்பா, கோத்தா டாருல் நாயிம், வாகாப் பாரு ஆகிய தீயணைப்பு,  மீட்பு நிலையங்களைச் சேர்ந்த பல வாகனங்களும் 48 அதிகாரிகளும், கோத்தா பாரு தன்னார்வ தீயணைப்புப் படையும் ஈடுபட்டன.

"ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. நடவடிக்கை அதிகாலை 12.30 மணிக்கு முடிவடைந்தது."

"இந்தத் தீ விபத்தில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தின் காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset