செய்திகள் மலேசியா
இரு மோட்டார் சைக்கிள்களை மோதியதற்காக பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை குகெந்திரன் மறுத்தார்
கோலாலம்பூர்:
நேற்று அதிகாலையில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டியதாக சாட்டப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு, இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் குற்றமற்றவர் என மறுத்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட டி. எஸ். குகெந்திரன் (25), மாஜிஸ்திரேட் தெங்கு ஷாஸ்வானி யாஸ்மின் துவான் ரோஸ்லான் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் அந்த மறுப்பைத் தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு ஹோண்டா சிட்டி காரை பொறுப்பற்ற முறையில் ஓட்டியதால், முஹம்மத் ஆபிக் ஜாயானி அஸ்லியுசைனி (வயது 24), முஹம்மத் ஹைரி அப்துல் ரஹ்மான் (வயது 19) ஆகிய இருவர் ஓட்டிய இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில், நகர மையத்திலிருந்து ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் நோக்கி செல்லும் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் நடந்துள்ளது.
இதனால், அவர் 1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1) கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM15,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படலாம்.
இந்த வழக்கில் துணை வழக்குத் தொடரும் அதிகாரி நூர்பத்ரிசியா முஹம்மத் ரசீப் வழக்குத் தொடர்பைக் கையாண்டார். குற்றஞ்சாட்டப்பட்டவர் வழக்கறிஞர் அஹ்மத் நாட்ஸ்லி ரிஸால் என்பவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் RM4,000 ஜாமீன் தொகையை வழக்குத் தொடர்பு தரப்பு முன்மொழிந்தது, ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் ஜாமீன் தொகையைக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் இளங்கலைப் பட்டப்படிப்புக்காக தனது உயர்கல்வியைத் தொடருவதற்கான நுழைவை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், கெந்திங் ஹைலாண்ட்ஸில் பகுதி நேர வேலை செய்து வருவதாக அவரது தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
"குற்றஞ்சாட்டப்பட்டவரின் பிணைய உத்தரவாததாரர் அவரது சொந்த தந்தை, வயது 51. அவர் மாதம் RM4,000 சம்பாதிக்கிறார். அவர் தனது மனைவி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் உடன்பிறப்புகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.
"எனவே, தப்பியோடும் அபாயம் எதுவும் இல்லை, மேலும் அவர் போலிஸாருக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருவதால், குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஜாமீன் தொகையைக் குறைந்தபட்ச தொகையாக நிர்ணயிக்க வேண்டும் என்று கோருகிறேன்" என்று அவர் கூறினார்.
நீதிமன்றம் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் RM3,000 ஜாமீனில், ஒரு உத்தரவாததாரருடன் விடுவிக்க அனுமதித்தது. மேலும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக அடுத்த ஜூன் 15 ஆம் தேதியை நிர்ணயித்தது.
இதற்கு முன்னர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் ஒரு கார், இரு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்றில், சமிஞ்சை விளக்கை மீறி விபத்தை ஏற்படுத்தியதாக ஒரு ஆணை போலிஸார் கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி முஹம்மத் சம்சூரி முஹம்மத் இசா, 25 வயதான அந்த ஓட்டுநர் நேற்று மதியம் 1 மணியளவில் ரவாங்கில் உள்ள குண்டாங் என்ற இடத்திலுள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.
ஆரம்பக் கட்ட விசாரணையில், 24, 19 வயதுடைய இருவரும் ஓட்டிய இரு மோட்டார் சைக்கிள்கள், பச்சை விளக்குடன் ஒரு சந்திப்பைக் கடந்து கொண்டிருந்தன. அப்போது வலது பக்கத்திலிருந்து வந்த ஒரு கார், சிவப்பு விளக்கை மீறியதாக நம்பப்படும் நிலையில், எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்களையும் மோதியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் கடுமையான காயங்களால் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 24 வயதுடைய நபரின் இடது கால் துண்டிக்கப்பட்டது, அதே சமயம் மற்றவரின் கை, இடது கால் எலும்பு முறிந்தது என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
மலேசியாவில் அழியும் நெல் வயல்கள்
April 3, 2026, 2:57 pm
