நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் பரபரப்பு: காப்பி, பிஸ்கட் தயாரிப்பில் பன்றி உரோமம்

மலாக்கா: 

இந்த மாத தொடக்கத்தில் உள்ளூரைச் சேர்ந்த இரண்டு உற்பத்தியாளர்களின் ஹலால் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வெளியிடும் காப்பி, பிஸ்கட் பொருட்கள் அனைத்தையும் உடனடியாகச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 'முகல்லஸாஹ்' என வகைப்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நுகர்வோர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்தப் பொருட்கள் குறித்து குழப்பமடையாமல் தடுப்பதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக மாநில கல்வி, உயர்கல்வி, சமய விவகாரங்களுக்கான தலைவர் டத்தோ ரஹ்மத் மரிமான் கூறினார்.

தொடர்புடைய காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும், மேலும் அந்த உத்தரவுக்கு இணங்குவது உறுதி செய்யப்படும் வகையில் அவை கண்காணிக்கப்படும் என்றார் அவர்.

"குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இரு நிறுவனங்களும் மலாக்கா இஸ்லாமிய மதத் துறையிடம் (ஜெய்ம்) மீண்டும் ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன், அனைத்து நிபந்தனைகளையும் நடைமுறைகளையும் பூர்த்தி செய்வதைப் பொறுத்ததாகும்."

"உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சுடன் இணைந்து, சந்தையில் அந்தப் பொருட்களின் இருப்பை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம். அவர்கள் மாநில மத அதிகாரிகளின் அனுமதியின்றி ஹலால் லோகோவைப் பயன்படுத்தினால், அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

நேற்றிரவு மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் உள்ள அல்-ஆலமி மசூதியில், மலாக்கா முதல்வராக டத்துக் ஸ்ரீ அப் ரவுஃப் யூசோவின் மூன்றாண்டு நிர்வாகத்தை முன்னிட்டு மாநில அளவிலான யாசீன் ஓதல், நன்றி தெரிவிக்கும் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம், இந்த மாநிலத்தில் காப்பி, பிஸ்கட் பதப்படுத்தும் இரண்டு தொழிற்சாலைகள் உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பணிகளில் பன்றி முடி தூரிகைகளைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவற்றின் ஹலால் சான்றிதழ்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதை ஜெய்ம் உறுதிப்படுத்தியது.

இந்த விவகாரம் கடந்த ஜனவரியில் ஜெய்மின் ஹலால் மேலாண்மைப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆய்வில், குறித்த வளாகங்களில் விலங்கு முடியை அடிப்படையாகக் கொண்ட தூரிகைகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

அந்த தூரிகைகள் நெகிரி செம்பிலானின் நீலாயில் உள்ள பண்டார் என்ஸ்டெக்கில் அமைந்துள்ள மலேசிய ஹலால் பகுப்பாய்வு மையத்திற்குப் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. பின்னர் அவை பன்றி முடியின் இயற்பியல் பண்புகளைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பிஸ்கட், காப்பி உற்பத்தி தொழிற்சாலைகளில், ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பம் ஏதேனும் பரிசீலிக்கப்படுவதற்கு முன், ஜெய்ம் தொடர்ந்து கண்காணித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset