நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM3.6 மில்லியன் தங்கக் கொள்ளை சம்பவம்: பினாங்கில் ஒன்பது பேர் கைது

ஜார்ஜ் டவுன்: 

RM3.6 மில்லியன் மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்களைக் கைது செய்ததன் மூலம், ஆயுதம் ஏந்திய கொள்ளைக் கும்பலை முடக்கியிருப்பதாக பினாங்கு போலிசார் தெரிவித்துள்ளனர்.

"ஒப் ஜிங்கா டி கார்டன்" என்ற நடவடிக்கையின் கீழ், மாநிலம் முழுவதும் பல சோதனைகளின் மூலம் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2, வியாழக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில், மாநில போலிஸ் புலனாய்வுத் துறையின் அதிகாரிகளும் பணியாளர்களும், வட செபராங் பிராய் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபட்டதாக மாநில போலிஸ் தலைவர் டத்துக் அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

தென்மேற்கு, வடகிழக்கு மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 23 முதல் 43 வயதுக்குட்பட்ட ஏழு உள்ளூர் ஆண்களும், இரண்டு இந்தோனேசியப் பெண்களும் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

"நடவடிக்கையின் போது, சுமார் 4.3 கிலோகிராம் எடையுள்ள தங்க நகைகள், ஒரு அரிவாள், ஸ்போர்ட்ஸ் ரிம்களுடன் கூடிய நான்கு டயர்கள், கொள்ளைகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தோம்."

"பினாங்கைச் சுற்றியுள்ள தங்கக் கடைகளில் விநியோகம் அல்லது பரிவர்த்தனைகளுக்காக நகைகளை எடுத்துச் சென்றுகொண்டிருந்த விற்பனையாளர்களை இந்தக் கும்பல் குறிவைத்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது" என்று அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தக் கைதுகளுடன், மார்ச் 26 அன்று காலை 9.20 மணிக்கு வட செபராங் பிராயில் பதிவான கொள்ளைச் சம்பவத்தைத் தீர்த்துவிட்டதாகப் போலிசார் நம்புவதாக டத்துக் அசிஸி கூறினார்.

அந்தக் கொள்ளையில் RM3.6 மில்லியன் மதிப்பிலான 6 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் மூன்று பேருக்கு கடுமையான குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவருக்கு 17 குற்ற வழக்குகளுடன் ஒரு போதைப்பொருள் வழக்கு இருப்பதாகவும் சோதனையில் தெரியவந்துள்ளது.

"மூன்று சந்தேக நபர்களின் உடலில் மெத்தாம்பேட்டமின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது" என்று அவர் கூறினார். மீதமுள்ள கும்பல் உறுப்பினர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 395, 397, 109ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset