நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'மோதல்களைத் தீர்க்கவும், போரை நிறுத்தவும் சமாதானப் பேச்சுவார்த்தையே சிறந்த வழி': துன் மகாதீர்

புத்ராஜாயா: 

நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத், உலகம் போர்களை நிறுத்த வேண்டும் என்று கோரி குரல் எழுப்பியுள்ளார்.

வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வு அல்ல; மாறாக அது பெருமளவு கொலைகளுக்கும் அழிவுக்குமே வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

"நான் எப்போதும் போரை எதிர்ப்பவன். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாக மனிதக் கொலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது."

"போர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம், ஏனெனில் கொலை விளைவிக்காத, மிகக் குறைந்த செலவில் பிரச்சினைகளைத் தீர்க்க வேறு வழிகள் இருக்கின்றன" என்றார் அவர்.

"மனிதர்கள் சிந்திக்கும் திறனைப் பெற்றுள்ளனர். அந்த வழிகளில் பேச்சுவார்த்தை, நடுவர் முறை அல்லது சட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றின் மூலம், ஒவ்வொரு தீர்வின் நன்மை தீமைகளையும் மனிதர்கள் மதிப்பிட செய்யும் திறன் கொண்டவர்களாவர்."

"ஆகையால், மோதல்களைத் தீர்க்க சமாதானப் பேச்சுவார்த்தையே சிறந்த வழி. போரை நிறுத்துங்கள்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

பல பெரும் வல்லரசுகள் ஈடுபடும் இராணுவ நடவடிக்கைகள் பிராந்திய நிலைத்தன்மை, உலகளாவிய பாதுகாப்பு குறித்த கவலையைத் தூண்டியுள்ள நிலையில், மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் அந்த முன்னாள் பிரதமரின் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் அப்பகுதியில் பரவலான பதிலுதைத் தாக்குதல்களைத் தூண்டியுள்ளதால், மேற்கு ஆசியாவில் புவிசார் அரசியல் பதற்றம் தொடர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய இந்த மோதலில், ஈரானின் அணு வசதிகளும் முக்கிய இராணுவ உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல மூலோபாய இலக்குகள் மீதும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து வான் தாக்குதல்களை நடத்தின.

அதன் பின்னர், ஈரானுடன் தொடர்புடைய ஏவுகணை வசதிகள், இராணுவத் தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட இலக்குகள் மீது நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

அண்மைய முன்னேற்றங்களில், தெஹ்ரானின் பகுதிகள், பெய்ரூட் உள்ளிட்ட ஈரானுக்கு வெளியேயான இலக்குகளையும் இந்தத் தாக்குதல்கள் உள்ளடக்கியுள்ளன, இதனால் பிராந்திய மோதலின் அளவு விரிவடைந்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல், வளைகுடா நாடுகளை நோக்கி பல ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. மேலும், அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளின் எந்த நிலத் தாக்குதலுக்கும் எதிராக கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

 இரு தரப்பினரும் எரிவாயு ஆலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மூலோபாய தொழிற்சாலைகள் உள்ளிட்ட எரிசக்தி, பொருளாதார உள்கட்டமைப்புகளை குறிவைக்கத் தொடங்கியுள்ளதால், மோதல் இப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த முன்னேற்றம் உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் இடையூறுகளையும் ஏற்படுத்தி உலக எரிசக்தி விநியோகம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

பிராந்திய அளவில், ஏமனில் உள்ள ஹூதி குழுவும் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போன்ற ஈரானின் நட்பு குழுக்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டுள்ளதால் மோதல் இன்னும் விரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் சில வளைகுடா நாடுகள் பதிலுதைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

இதற்கிடையில் நீண்டகாலப் போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரான் வலியுறுத்தியுள்ளது. இராணுவ அழுத்தம் தொடர்ந்தால் மேலும் தாக்குதல்களை அதிகப்படுத்தும் என எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கத் தலைமை எதிர்வரும் காலத்தில் மேலும் ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டியுள்ளது, இது மேற்கு ஆசியாவில் பெரிய அளவிலான மோதலின் அபாயத்தை அதிகரித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset