செய்திகள் இந்தியா
மனைவியைக் கொன்ற கணவனுக்குச் சிறை: காஜியாபாத் நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு
காஜியாபாத்:
திருமணமாகி மூன்றே மாதங்களில் வரதட்சணைக் கொடுமையால் தனது மனைவியைக் கொலை செய்த நபருக்கு, உத்திரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் கடந்த 2022-ஆம் ஆண்டு லோனி பகுதியில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட நபர், கூடுதல் வரதட்சணை கேட்டுத் தனது மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததோடு, இறுதியில் அவரைக் கொலை செய்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த கூடுதல் மாவட்ட, அமர்வு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளால் ஒரு பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சமூகத்தில் வரதட்சணைக் கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பைப் பெண்ணின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். தங்களுக்குக் காலதாமதமானாலும் முறையான நீதி கிடைத்துள்ளதாக அவர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
