நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க மக்களைச் சாடும் ஈரான் அதிபர் பெஜேஷ்கியனின் நீண்ட பொது கடிதம் 

தெஹ்ரான்:

தனது நாட்டின் செயல்களை நியாயப்படுத்தி, அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று மறுத்து, மோதலைத் தீவிரப்படுத்தியதற்காக அமெரிக்காவையே குறை சொல்லி, தொடரும் தாக்குதல்கள் நிலையற்ற தன்மையையும் வெறுப்பையும் ஆழப்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்து ஈரான் ஜனாதிபதி டிரம்பின் தேசிய உரைக்கு முன்னதாக அமெரிக்க மக்களுக்கு நீண்ட பொது கடிதம் வெளியிட்டுள்ளார்.

"ஈரானின் எரிசக்தி தொழில்துறை வளாகங்கள் உட்பட முக்கிய உள்கட்டமைப்புகளைத் தாக்குவது நேரடியாக ஈரானிய மக்களை இலக்காக்குகிறது. இது ஒரு போர்க் குற்றமாக இருப்பதோடு, இத்தகைய செயல்களின் விளைவுகள் ஈரானின் எல்லைகளைத் தாண்டி பரவும்" என்று அவர் எச்சரித்தார்.

"ஈரான் என்கிற இந்த பெயர், அதன் அடையாளத்தால் மனித வரலாற்றில் மிகவும் பழமையான தொடர்ச்சியான நாகரிகங்களில் ஒன்று. பல்வேறு காலங்களில் வரலாற்று, புவியியல் நன்மைகளைப் பெற்றிருந்தாலும், ஈரான் தனது நவீன வரலாற்றில் எப்போதும்

ஆக்கிரமிப்பு, விரிவாக்கம் அல்லது ஆதிக்கத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு, படையெடுப்பு என உலக சக்திகளின் தொடர்ந்த அழுத்தத்தைச் சந்தித்தாலும் பல அண்டை நாடுகளை விட இராணுவ மேன்மை கொண்டிருந்தாலும் ஈரான் எந்த போரையும் தொடங்கவில்லை. 

ஈரானிய மக்கள் அமெரிக்கா, ஐரோப்பா அல்லது அண்டை நாடுகளின் மக்கள் உட்பட மற்ற நாடுகளிடம் எந்த பகையையும் வைத்திருக்கவில்லை.

தங்கள் பெருமைமிக்க வரலாற்றில் நேர்ந்த வெளிநாட்டு தலையீடுகள், அழுத்தங்களை எதிர்கொண்டபோதும், ஈரானியர்கள் அரசாங்கங்களுக்கும் அவர்கள் ஆளும் மக்களுக்கும் இடையில் எப்போதும் தெளிவான வேறுபாடு கண்டுள்ளனர். இது ஈரானிய கலாச்சாரத்திலும் கூட்டு உணர்வுகளிலும் ஆழமாக வேரூன்றிய கொள்கையாக உள்ளது.

இந்தக் காரணத்தால், ஈரானை ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பது வரலாற்று யதார்த்தத்துடனோ அல்லது தற்போது காணக்கூடிய உண்மைகளுடனோ இணக்கமானதல்ல. 

அமெரிக்கா ஈரானைச் சுற்றி மிக அதிகமான தனது படைகள், தளங்கள், இராணுவ திறன்களை குவித்துள்ளது. இந்தத் தளங்களிலிருந்தே மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய அமெரிக்க ஆக்கிரமிப்புகள் இத்தகைய இராணுவ இருப்பு உண்மையில் எவ்வளவு அச்சுறுத்தலானது என்பதை நிரூபித்தன.

இயல்பாகவே, இத்தகைய சூழல்களை எதிர்கொள்ளும் எந்த நாடும் தன் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதை விட்டுவிட மாட்டாது. ஈரான் செய்தது, தொடர்ந்து செய்வது சட்டப்பூர்வமான தற்காப்பில் ஆழமான நியாயமான நடவடிக்கை; போர் அல்லது ஆக்கிரமிப்பைத் தொடங்குவதல்ல.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் முதலில் விரோதமாக இல்லை. ஈரானிய, அமெரிக்க மக்களுக்கிடையிலான ஆரம்ப தொடர்புகள் விரோதத்தால் கறைபட்டிருக்கவில்லை. திருப்புமுனை 1953-ல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு இத்தகைய போர்களுக்கு வழிவகுக்கின்றன. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு ஈரானின் ஜனநாயக செயல்முறையை சீர்குலைத்து, சர்வாதிகாரத்தை மீட்டமைத்து, அமெரிக்க கொள்கைகளில் ஈரானியர்களிடையே ஆழமான அவநம்பிக்கையை விதைத்தது.

ஆயினும் இந்த அழுத்தங்கள் எல்லாம் ஈரானை பலவீனப்படுத்தவில்லை. மாறாக, நாடு பல துறைகளில் வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களிடையே கல்வி  மூன்று மடங்காக உயர்ந்ததுடன் உயர்கல்வி கணிசமாக விரிவடைந்தது. நவீன தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அடையப்பட்டன. மேலும், சுகாதார சேவைகள் மேம்பட்டன. உள்கட்டமைப்பு கடந்தகாலத்துடன் ஒப்பிடமுடியாத வேகத்திலும் அளவிலும் வளர்ந்தது. 

அதே நேரத்தில், யுத்தங்கள் ஆக்கிரமிப்பின் அழிவுகரமான, மனிதாபிமானமற்ற தாக்கத்தை வீரர்களான ஈரானிய மக்களின் வாழ்விலிருந்து குறைத்து மதிப்பிடக்கூடாது. இராணுவ ஆக்கிரமிப்பு, சமீபத்திய குண்டுவீச்சுகளின் தொடர்ச்சி மக்களின் வாழ்க்கை, கண்ணோட்டங்களை ஆழமாக பாதிக்கிறது.

தொடர்ந்து, இந்த யுத்தம் அமெரிக்க மக்களின் எந்த நலன்களை உண்மையில் பூர்த்தி செய்கிறது? இத்தகைய நடத்தையை நியாயப்படுத்த ஈரானிடமிருந்து ஏதேனும் புறநிலை அச்சுறுத்தல் இருந்ததா? அப்பாவி குழந்தைகளைப் படுகொலை செய்வது, புற்றுநோய் சிகிச்சை மருந்து வளாகங்களை அழிப்பது, அல்லது ஒரு நாட்டை "கல் யுகத்திற்கு" தள்ளும் அளவிற்கு குண்டுவீசுவாம் என்று பெருமைபடுவது போன்ற செயல்கள் அமெரிக்காவின் உலக நற்பெயரை மேலும் சேதப்படுத்துவதைத் தவிர வேறு என்ன நோக்கம் பூர்த்தி செய்கிறது? என்ற கேள்வி கனைகளையும் ஈரானின் ஜானாதிபதி அமெரிக்க மக்களிடம் தொடுத்துள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது, ஒரு ஒப்பந்தத்தை எட்டியது, தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியது. அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதும், மோதலை நோக்கி தீவிரப்படுத்துவதும், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதே இரண்டு ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வதும் அமெரிக்க அரசாங்கம் எடுத்த அழிவுகரமான முடிவுகளாகும்.

இஸ்ரேலால் தாக்கப்பட்டு வழிகாட்டப்பட்டு, அந்த ஆட்சியால் செல்வாக்கு செலுத்தப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டு அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்பில் நுழையவில்லையா? இஸ்ரேல் ஒரு ஈரானிய அச்சுறுத்தலை கட்டமைப்பதன் மூலம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தனது குற்றங்களிலிருந்து உலகக் கவனத்தைத் திசை திருப்ப முயலவில்லையா? 

"அமெரிக்கா முதலில்" என்பது இன்று அமெரிக்க அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் உண்மையில் உள்ளதா?

தவறான தகவல்களுக்கு அப்பால் பார்க்கும்படி உங்களை அழைக்கிறேன். மாறாக ஈரானுக்கு சென்று வந்தவர்களிடம் பேசுங்கள். ஈரானில் கல்வி கற்று உலகின் மிக மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும், ஆராய்ச்சி செய்யும் அல்லது மேற்கில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பங்களிக்கும் திறமையான ஈரானிய குடியேற்றவாசிகளைக் கவனியுங்கள். இந்த உண்மைகள் ஈரான், அதன் மக்களைப் பற்றி உங்களுக்கு சொல்லப்படும் திரிபுகளுடன் ஒத்திருக்கின்றனவா?

இன்று, மோதலின் பாதையில் தொடர்வது வெகுகாலத்திற்கு முன்பை விட அதிக விலையுயர்ந்ததாகவும் வீணானதாகவும் உள்ளது. மோதலுக்கும் ஈடுபாட்டிற்கும் இடையிலான தேர்வு உண்மையானதும் விளைவு மிகுந்ததும் ஆகும்; அதன் விளைவு வரும் தலைமுறைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும். தனது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பெருமைமிக்க வரலாறு முழுவதும், ஈரான் பல ஆக்கிரமிப்பாளர்களைக் கடந்துவந்தது. அவர்களில் எஞ்சியிருப்பவை வரலாற்றில் களங்கமடைந்த பெயர்கள் மட்டுமே. இருப்பினும் ஈரான் பெருமையுடன் உறுதியாகவும் கண்ணியமாகவும் நிலைத்திருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset