நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹைட்டியில் தொடரும் கும்பல் வன்முறைகள்: 70-க்கும் மேற்பட்டோர் பலி

பனாமா சிட்டி:

கரீபியன் நாடான ஹைட்டியின் ஆர்டிபோனைட் நகரத்தில் உள்ள ஜீன் டெனிஸ் பகுதியில், 'கிரான் கிரிஃப்' (Gran Grif) என்ற ஆயுதமேந்திய கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த வன்முறையில், பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதோடு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

காவல்துறையின் முதற்கட்ட அறிக்கையில் 16 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டாலும், உள்ளூர் அதிகாரிகள், ஊடகத் தகவல்கள் பலி எண்ணிக்கை எழுபதைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

எரிக்கப்பட்ட வீடுகளுக்குள் பல சடலங்கள் இருக்கக்கூடும் என்பதால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை 85-க்கும் அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கும்பலின் துப்பாக்கிச் சூட்டிற்கு அஞ்சி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைத் துறந்து பாதுகாப்பான இடங்களைத் தேடித் தப்பியோடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்குச் செல்ல முறையான சாலை வசதிகள் இல்லாததாலும், வன்முறைத் தொடர்வதாலும் மீட்புப் பணிகளிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு ஆயுதமேந்திய கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதுடன், நாட்டின் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகச் சர்வதேசச் சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அந்நாட்டுத் தேசியப் போலிசார், வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் படைகளைக் குவித்துள்ளனர். இருப்பினும், பல பகுதிகள் இன்னும் ஆயுதக் கும்பல்களின் கட்டுப்பாட்டிலேயே நீடிப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset