நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்ப அலையை எதிர்கொள்ளும் மலேசிய அரசு: 4 மாநிலங்களில் செயற்கை மழை பொழியவைக்கும் அதிரடித் திட்டம்

புத்ராஜெயா: 

மலேசியாவின் நான்கு மாநிலங்களில் நிலவி வரும் கடும் வெப்பம், அணைகளின் நீர்மட்டக் குறைவைத் தடுக்கும் பொருட்டு, வரும் ஏப்ரல் 6 முதல் 9-ஆம் தேதி வரை செயற்கை மழை பொழியவைக்கும் 'மேக விதைப்பு' (Cloud Seeding) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

பெர்லிஸ், கெடா, பேராக், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 11 முக்கிய அணைகளை மையமாகக் கொண்டு இந்தச் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹமத் ஜாஹித் ஹமிடி இன்று தெரிவித்துள்ளார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை (NADMA), மலேசிய அரச விமானப்படை, வானிலை ஆய்வுத் துறை ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன. குறிப்பாக, சி-130 ஹெர்குலஸ் (C-130 Hercules) ரக விமானங்களின் உதவியுடன் மேக விதைப்பு பணிகள் நடைபெறும். 

பருவமழை மாற்றத்தினால் மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ள இந்த வெப்பமான சூழலை எதிர்கொள்ள, மாநில அளவிலான பேரிடர் மேலாண்துறையினர் தரவு அடிப்படையிலான துல்லியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அணைகளின் நீர் இருப்பு, நிலத்தடி ஈரப்பதம், குடிநீர் விநியோகம் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, மாநிலக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இத்தகைய தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு அப்பால், நீர் தட்டுப்பாட்டினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய குறைந்த வருமானப் பிரிவினர், முதியவர்கள், சிறு விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் துணைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குத் தண்ணீர் லாரிகள் மூலம் அவசர உதவி வழங்கவும், எதிர்காலத் தேவைக்காக மழைக்காலங்களில் நீரைச் சேமிப்பதற்கான நடுத்தர கால யுக்திகளை வகுக்கவும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. உணவு உற்பத்தி, பொது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகள் இந்த வறட்சியால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து அரசு முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் துணைப் பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset