நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் நிலத்தடித் தீ: கிராம மக்கள் கடும் பீதி

பாச்சோக்: 

கிளாந்தான், பாச்சோக் மாவட்டத்தில் உள்ள கம்போங் குவாவ் பகுதியில், நிலத்தடியில் மறைந்திருந்த தீ மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளதால் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி 19 முதல் எரிந்து வந்த நிலக்கரி மண், தீயணைப்புப் படையினரின் நடவடிக்கையால் புகையாகக் குறைந்திருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடைந்து ரப்பர், எண்ணெய் பனைத் தோட்டங்களுக்குப் பரவி வருகிறது.

இப்பகுதியில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தீ விபத்துகளை எதிர்கொள்ள 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 12 ஆழ்துளைக் கிணறுகளில், தற்போது ஒன்று மட்டுமே செயல்படுவதாகக் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

மீதமுள்ள கிணறுகளை உடனடியாகச் செயல்பாட்டிற்குத் கொண்டு வந்து, நிலத்தடித் தீயை அணைக்க நீர் விநியோகத்தை உறுதி செய்யுமாறு இயற்கை வளத் துறை, புவியியல் ஆய்வுத் துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது போதிய உபகரணங்கள் இல்லாத நிலையில், கிராம மக்கள் சிறு ரசாயனத் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை ஊற்றித் தீ குடியிருப்புப் பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப் போராடி வருகின்றனர். 

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தீ விபத்தால், குவாவ் பெசார், கோங் வாயாங் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அடர்ந்த புகையினால் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவதோடு, தங்களின் பயிர்களையும் இழந்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset