நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய வாகனங்களில் எரிபொருள் திருட்டா?: தாய்லாந்து சுற்றுலாத்துறை விளக்கம்

கோத்தா பாரு:

தெற்கு தாய்லாந்துக்குச் செல்லும் மலேசிய வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை தாய்-ஆசியான் ஹலால் சுற்றுலாத் தொழில் சங்கம் (TAHTA) திட்டவட்டமாக மறுத்துள்ளது. மலேசியப் பயணிகள் இத்தகைய வதந்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த அச்சங்கத்தின் தலைவர் ஐடா ஓஜே, கடந்த ரமலான் மாதத்தில் நாராதிவாட் பகுதியில் தாய்லாந்து நாட்டு வாகனங்களில் மட்டுமே எரிபொருள் திருடப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார். மலேசிய வாகனங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகப் புகார்கள் ஏதும் வரவில்லை என்பதை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தெற்கு தாய்லாந்தில் நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடு கடந்த நான்கு நாட்களாகச் சீராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹத்யாய், சோங்க்லா போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் மலேசியர்கள், அங்குள்ள டீசல், பெட்ரோல் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்குமாறு மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், மலேசியப் பயணிகள் தாராளமாகத் தாய்லாந்திற்கு வருகை தரலாம் எனச் சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset